2013-04-24 16:46:49

தென்கிழக்கு ஆசியாவில் மனித வியாபாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு 24 துறவு சபைகளின் தலைவர்கள் தீர்மானம்


ஏப்.24,2013. தென்கிழக்கு ஆசியாவில் மனித வியாபாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு மேலும் அதிக ஊக்கத்துடன் செயல்படவிருப்பதாக, அப்பகுதியின் 24 துறவு சபைகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
SEAMS என்ற தென்கிழக்கு ஆசியத் துறவு சபைகளின் தலைவர்கள் நடத்திய 15வது மாநாட்டின் இறுதியில் இத்திங்களன்று அறிக்கை வெளியிட்ட அதன் பிரதிநிதிகள், மனித வியாபாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு அதிகமான ஒத்துழைப்பு அவசியம் என்று கூறினர்.
உலகில் அதிவேகமாக வளர்ந்துவரும் மனித வியாபாரக் குற்றத்தில் ஆண்கள், பெண்கள், சிறார் என ஏறக்குறைய 2 கோடியே 70 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனைத்துலக மனித உரிமை நிறுவனங்கள் கூறுகின்றன.
கடந்த ஜூனில் உலக தொழில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆசிய-பசிபிக் பகுதியில், மனித வியாபாரம் என்ற இந்த நவீன அடிமைத்தனத்தால் ஏறக்குறைய ஒரு கோடியே 17 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.
தென்கிழக்கு ஆசியத் துறவு சபைகளின் தலைவர்கள் நடத்திய 15வது மாநாட்டில் பிற 9 ஆசிய நாடுகளிலிருந்து 33 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.