திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவைக்கு வெளியே இயேசுவைக் காண்பது இயலாதது
ஏப்.23,2013. நற்செய்தி அறிவிப்பின் இனிமையான மகிழ்ச்சியாகிய மறைப்பணிச் செயல்கள் திருஅவையை
அன்னையாக ஆக்குகின்றது, ஏனெனில் திருஅவை தனது பிள்ளைகள் வளர்வதைப் பார்க்கின்றது, ஒரு
தாயாக நமக்கு விசுவாசத்தையும், தனித்துவத்தையும் வழங்குகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ்
கூறினார். கிறிஸ்தவத் தனித்துவம், அடையாள அட்டை அல்ல, ஆனால் அது திருஅவைக்கு உரியது,
ஏனெனில் திருஅவைக்கு வெளியே இயேசுவைக் காண்பது இயலாதது என்றும் திருத்தந்தை கூறினார். புனித
ஜார்ஜ் விழாவான இச்செவ்வாயன்று வத்திக்கானின் புனித பவுல் சிற்றாலயத்தில் ஐம்பது கர்தினால்களுடன்
சேர்ந்து திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவை மற்றும் அதன் மறைப்பணிகள்
குறித்து தனது மறையுரையில் எடுத்துச் சொன்னார். தனது நாம விழாவான இந்நாளின் திருப்பலியில்
தன்னோடு சேர்ந்து திருப்பலி நிகழ்த்திய கர்தினால்களுக்கு முதலில் நன்றி தெரிவித்த திருத்தந்தை
பிரான்சிஸ், உங்களால் உண்மையிலேயே நானே வரவேற்கப்படுவதாக உணர்கிறேன், உங்களோடு இருப்பது
நன்றாக உள்ளது, இது எனக்கு விருப்பமானது என்று திருப்பலியின் தொடக்கத்தில் கர்தினால்களிடம்
கூறினார். இவ்விழாவின் திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை,
திருஅவையின் மறைப்பணி, கிறிஸ்தவத்தின் அடக்குமுறையின்போதே விரிவடைந்தது என்றுரைத்த திருத்தந்தை,
அடக்குமுறையினால் தூர இடங்களுக்குச் சென்ற அக்கிறிஸ்தவர்கள் தங்களோடு அப்போஸ்தலிக்க ஆர்வத்தை
எடுத்துச் சென்றனர், இவ்விதமாக விசுவாசம் பரவியது என்று கூறினார். ஹோர்கே மாரியோ பெர்கோலியோ
(Jorge Mario Bergoglio) என்ற இயற்பெயரைக் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நாம
விழா ஏப்ரல் 23ம் தேதியாகும். ஏப்ரல் 23ம் தேதி புனித ஜார்ஜ் விழாவாகும்.