2013-04-23 15:23:15

சிரியாவில் துன்புறும் குடும்பங்களுக்கு உதவுமாறு, புனிபூமியின் காவலர் விண்ணப்பம்


ஏப்.23,2013. சிரியாவில் வன்முறைகளால் துன்புறும் குடும்பங்களுக்கு உதவுமாறு, புனித பூமியின் காவலரான பிரான்சிஸ்கன் சபையின் அருள்திரு Pierbattista Pizzaballa விண்ணப்பித்துள்ளார்.
2011ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி சிரியாவில் சண்டை தொடங்கி, இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்வேளை, அந்நாட்டில் அனைத்துத் தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டுள்ளன, கடந்தவாரத்தில் தமஸ்கு நகருக்கு தென்மேற்கே இடம்பெற்ற புதிய தாக்குதல்களில் 550க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அருள்திரு Pizzaballa கூறினார்.
Damascus, Aleppo, Latakia, Orontes போன்ற சிரியாவின் நகரங்களில் பணிசெய்து வரும் பிரான்சிஸ்கன் சபையினர், மத, இன வேறுபாடின்றி, புலம் பெயர்ந்துள்ள அனைத்து மக்களுக்கும் தங்களது இல்லங்களில் தஞ்சம் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சிரியாவில் சண்டையிடும் தரப்புகளுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டாமென்று கத்தார் மற்றும் பிற அரபு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
சிரியாவில் போரிடும் புரட்சியாளர்களுக்கு இன்னும் அதிகமான கனரக ஆயுதங்களை வழங்குமாறு கத்தார் நாடு அழைப்பு விடுத்திருந்ததாக ஊடகச்செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.