2013-04-22 16:58:23

வாரம் ஓர் அலசல் – பூமித்தாயைக் காப்பாற்றுவோம்


ஏப்.22,2013 RealAudioMP3 . தமிழகத்தின் குறைந்தது எட்டு நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் வறுத்தெடுக்கின்றது. இந்தக் கொடும் வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பைச் சமாளிக்க அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டியிருக்கிறது. அதேசமயம், அந்தத் தண்ணீர் சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டிகளில் குளிர்ச்சியை ஏற்படுத்திக் குடிக்கும் தண்ணீர் அத்தனை நலமானதும் அல்ல. அதோடு தற்போது தமிழகம் எதிர்கொள்ளும் கடும் மின்வெட்டினால் குளிர்சாதனப் பெட்டிகள் இயங்குவதற்குப் போதுமான மின்சாரமும் இல்லை. இந்நிலையில் இயற்கையான குளிர்சாதனப் பெட்டிகளாகிய மண்பானைகளுக்குத் தற்போது மவுசு கூடியிருக்கிறது. எனவே செயற்கை கைவிரிக்கும்போது நாம் இயல்பாகவே இயற்கையை நாடித்தான் செல்கிறோம். மின்விசிறிகள் வேலை நிறுத்தம் செய்யும்போது நிழல்தரும் மரங்களைதான் தேடிச் செல்கிறோம். கோடை விடுமுறை காலங்களில் சிறிது நாள்களாவது இயற்கைத்தாயின் குளுமையில் செலவிட்டு உடலிலும் மனதிலும் புத்துயிர் பெற்று மீண்டும் வேலைகளைப் புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்கிறோம். ஆனால் இன்று மரங்களும் காடுகளும் எப்படி பாதுகாக்கப்படுகின்றன? மரம் வளர்ப்பில் நமது பங்கு என்ன? இம்மாதம் 8 முதல் 19ம் தேதிவரை, துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் காடுகள் குறித்த 10வது அனைத்துலக கருத்தரங்கும், காடுகளைப் பாதுகாப்பதற்கான தங்களது நடவடிக்கைகளை மேம்படுத்துமாறு ஐ.நா.வின் 197 உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இக்கருத்தரங்கில் வெளியிடப்பட்ட சில தகவல்கள் இதோ....
இன்றைய உலகு ஒவ்வோர் ஆண்டும் 3 கோடியே 20 இலட்சம் ஏக்கர் காடுகளை, ஏறக்குறைய இங்கிலாந்தின் அளவுக்கு இழந்து வருகின்றது. ஆனால் இவ்வுலகின் உயிரினங்களில் 80 விழுக்காடு காடுகளில்தான் வாழ்கின்றன. உண்மையில், கார்பன் வெளியேற்றத்தைத் தடுப்பதில் காடுகள் முக்கிய இடம் வகித்தாலும், உலகில் வெளியேற்றப்படும் கார்பன் அளவில் 12 முதல் 18 விழுக்காட்டுக்கு காடுகள் அழிவே காரணமாக உள்ளது. இந்தக் கார்பன் வெளியேற்றம், உலகில் போக்குவரத்து வாகனங்களால் வெளியேற்றப்படும் கார்பன்டை ஆக்ஸைடு அளவுக்குச் சமமாக இருக்கின்றது. ஆயினும், இவ்வுலகினர் காலந்தாழ்த்தாமல் இப்பொழுதே செயலில் இறங்கினால் காடுகள் அழிவதைத் தடுக்க முடியும். ஏனெனில் இன்றும் உலகின் நிலப்பகுதியில் 30 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பகுதி காடுகளாக உள்ளது. உலகின் காடுகளில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரவகைகள் உள்ளன. பல மரவகைகள் குறித்த விபரங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலே உள்ளன. இக்காடுகள், உலகின் 160 கோடி ஏழைகளுக்கு உணவு, தண்ணீர், மருந்து போன்றவற்றை வழங்கி வருவதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாத்து வருகின்றன. எனவே காடுகளின் முக்கியத்துவத்தை உலகினருக்கு உணர்த்தும் விதத்தில், கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதியன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை அனைத்துலக காடுகள் தினம் கடைப்பிடிப்பதற்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி கடந்த மார்ச் 21ம் தேதியன்று அனைத்துலக காடுகள் தினம் முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த அனைத்துலக காடுகள் தினத்திற்குச் செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், காடுகள் உலக மக்களின் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளுக்கு மதிப்பிடமுடியாத உதவிகளைச் செய்து வருகின்றன எனக் கூறி, அரசுகளும், தொழில் அதிபர்களும், சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் காடுகளை அழிவினின்று பாதுகாப்பதற்குத் தங்களை அர்ப்பணிக்குமாறும் கேட்டுள்ளார். உலகுக்குத் தேவையான சுத்தமான தண்ணீரில் நான்கில் மூன்று பங்கு காடுகளிலிருந்து கிடைக்கின்றன. காடுகள் நிலச்சரிவைத் தடுக்கின்றன. சுனாமி மற்றும் புயல்களிலிருந்து கடற்கரைப் பகுதி மக்களைப் பாதுகாக்கின்றன. 300 கோடிக்கு மேற்பட்ட மக்கள் எரிபொருளுக்காக மரங்களைப் பயன்படுத்துகின்றனர். ஏறக்குறைய 200 கோடிப்பேர் தங்களது வருவாய்க்குக் காடுகளை நம்பியுள்ளனர். 75 கோடி மக்கள் காடுகளிலே வாழ்கின்றனர். நகர்ப்புறங்களும் நுகர்வோர் எண்ணிக்கையும் அதிகரிப்பது காடுகள் அழிவுக்குக் காரணமாக அமைகின்றன. அதேசமயம், கடந்த பத்து ஆண்டுகளில், உலகில் காடுகள் அழிந்து வருவது ஏறக்குறைய 20 விழுக்காடு குறைந்துள்ளது, நல்ல அடையாளமாக இருக்கின்றது என்றும் பான் கி மூன் கூறியுள்ளார். UNEP என்ற ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு, ஆப்ரிக்காவின் நைரோபியில் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையும், 2050ம் ஆண்டுக்குள் உலகின் ஏறக்குறைய 70 விழுக்காட்டு மக்கள் நகரங்களில் வாழ்வார்கள் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
RealAudioMP3 ஏப்ரல் 22, இத்திங்கள் அனைத்துலக பூமித்தாய் தினம். இலண்டன் முதல் புதுடெல்லிவரை, உலகின் 192 நாடுகளின் பெருநகரங்களில் இப்பூமித்தாய் தினம் அல்லது பூமி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அர்ஜென்டினாவின் Surfrider நிறுவனம், அந்நாட்டின் கடற்கரைகளைச் சுத்தம் செய்து, புயலையும் கடல் அரிப்பையும் தடுக்கும் மரங்களை நட்டது. மெக்சிகோவில் Tortugas Yepez நிறுவனம், கடல் ஆமைகளைப் பாதுகாப்பதற்குக் கடற்கரைகளைச் சுத்தம் செய்தது. அதோடு, காடுகள் அழிவைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. இவ்வாறு ஒவ்வொரு நாட்டிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் கருத்தரங்குகள், மேடை நாடகங்கள், பேரணிகள் என பல நடவடிக்கைகள் இடம்பெற்றன. அன்பர்களே, காடுகளை வளர்ப்போம், மரங்களை நடுவோம், பசுமை காப்போம் என்ற விளம்பரங்களை நாம் பல இடங்களில் வாசிக்கிறோம். ஆயிரம் மரக்கன்றுகளை நட்டவர்கள் பற்றிய விபரங்களையும் நம் வத்திக்கான் வானொலியில் கேட்டிருப்பீர்கள். தமிழகத்தின் ஈசா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அவர்களின் முயற்சியினால் 2006ம் ஆண்டு 17ம் தேதியன்று மட்டுமே 27 மாவட்டங்களில் 6,284 இடங்களில் 8,52,587 மரக்கன்றுகள் நடப்பட்டன. அது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது. இன்றும் ஆங்காங்கே பலர் தாங்களாகவே முன்வந்து இத்தகைய தன்னார்வப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
துருக்கி நாட்டுச் சுற்றுச்சூழல் இயக்கத்தின் தாத்தா என அறியப்படும் 92 வயதான Hayrettin Karaca என்பவர், 1992ம் ஆண்டில் ஐ.நா. சுற்றுச்சூழல் விருது உட்பட எண்ணற்ற சுற்றுச்சூழல் விருதுகளைப் பெற்றிருப்பவர். 1970களில் துணி வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திவந்த Karaca, துருக்கியின் பல இடங்களுக்குப் பயணம் செய்தபோது சுற்றுச்சூழல் சீர்கேடடைந்திருப்பதைக் கண்டார். அவரின் மூத்த மகன் தனது வியாபாரத்தை எடுத்துநடத்தத் தயாரானவுடன் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறார். TEMA என்ற நிறுவனத்தில் இவர் சேர்ந்து, 4 இலட்சத்து 60 ஆயிரம் தன்னார்வப் பணியாளர்களைத் திரட்டி ஒரு கோடிக்கு மேற்பட்ட மரங்கள் நடப்படுவதற்குக் காரணமாகியுள்ளார். காடுகளின் முக்கியத்துவம் குறித்து ஐ.நா.வானொலியின் May Yaacoub என்பவரிடம் ஒரு மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் பேசியிருக்கிறார் Karaca. RealAudioMP3
அன்பு நேயர்களே, இக்காலத்தில் வானிலை அறிக்கையில் கேட்பது ஒன்றாகவும், வெப்பநிலை வேறுவிதமாகவும் பலநேரங்களில் இருக்கின்றது. நிலநடுக்கம், புயல், வெள்ளம், சுனாமி, சூறாவளி, காட்டுத்தீ என இயற்கைப் பேரிடர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உறைபனிப் பகுதியாகிய அண்டார்டிக்காவில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதற்கு அங்கு வெப்பநிலை அதிகரித்திருப்பதே காரணம் என ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது. சீனாவின் தென்மேற்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மலைக்கிராமங்கள் பேரழிவுகளைச் சந்தித்துள்ளன. இந்நிலநடுக்கத்தால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11 ஆயிரத்து 500 பேர் காயமடைந்துள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், சீனாவில் இந்தக் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
எனவே அன்பு நேயர்களே, இந்தப் பூமித்தாய் தினத்தன்று தாய்ப்பூமியைப் பாதுகாப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுப்போம். காடுகளைப் பாதுகாக்கவும், மரங்களை நடவும், பசுமையைப் போற்றவும் நடவடிக்கைகளில் இறங்குவோம். மற்றவர்களையும் அப்பணியில் ஊக்குவிப்போம். தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழிப்போம். அனைத்துவகையான குப்பைகளையும், "பாலிதீன்' பயன்பாட்டையும் குறைத்து, மறுசுழற்சிப் பொருட்களைப் பயன்படுத்துவோம். மின்சாரத்தை சேமித்து, சி.எப்.எல்.,பல்புகளையும், சூரிய ஆற்றலையும் அதிகம் பயன்படுத்துவோம். குறைந்த தூரம் செல்ல, மோட்டார் வாகனத்தில் செல்வதைத் தவிர்ப்போம். வருங்கால தலைமுறையினர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ள உதவுவோம்.
90 வயதைக் கடந்த அந்தத் தாத்தா, வீட்டுத் தோட்டத்தில் மும்முரமான வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்பக்கமாக வந்த அவரின் பேரன், தாத்தா, இந்தத் தள்ளாத வயதில் எதற்கு இவ்வளவு சிரமப்பட்டு வேலை செய்கின்றீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர், 90 வயது தள்ளாத வயதா, பெர்டினென்ட் ரஸ்ஸல், தனது 94வது வயதில் அமைதிக்காகப் புத்தகம் எழுதினார். வின்ஸ்டன் சர்ச்சில், தனது 82வது வயதில் ஆங்கிலம் பேசும் மக்களின் வரலாற்றை எழுதினார். கஸ்டாஃப் ஈபிள், உலக அதிசயமான ஈபிள் கோபுரத்தை தனது 90வது வயதில் கட்டினார். பாலே நடனக் கலைஞர் அலெக்ஸாண்டர் தனது 90வது வயதில் நடனமாடி வகுப்பு எடுத்தார். இப்படிச் சொல்லிக்கொண்டே போனார் தாத்தா...
எனவே அன்பர்களே, பூமித்தாயைப் பாதுகாக்கும் பணியில் வயது வேறுபாடின்றி செயலில் இறங்குவோம். ஆளுக்குகொரு மரம் நட்டு வருங்காலத் தலைமுறைக்குப் பசுமையான பூமியை வழங்குவோம். சுற்றுச்சூழலைப் பாதுகாத்து அனைவரும் நலமாக வாழ வழி செய்வோம். நமக்கு வாழ்வளிக்கும் பூமித்தாயைப் போற்றுவோம்.







All the contents on this site are copyrighted ©.