2013-04-22 17:10:48

திருத்தந்தை பிரான்சிஸ் இளையோரிடம் : இயேசு என்ன விரும்புகிறார் என அவரிடம் கேளுங்கள்


ஏப்.22,2013. இயேசுவாகிய வாயில் வழியாக ஆட்டுக்கொட்டிலில் நுழையாமல் வேறு வழிகள் மூலமாக ஏறிக் குதிக்கும் மக்கள் கிறிஸ்தவ சமூகங்களிலும்கூட உள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் இத்திங்களன்று கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தின் ஆலயத்தில் இத்திங்கள் காலை நிகழ்த்திய திருப்பலியில் நல்லாயன் உவமை பற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, வேறு வழியாக நுழைபவர்கள் தங்களுக்கு உகந்தவற்றைத் தேடுபவர்கள் என்றும், இவர்கள் அறிந்தோ அறியாமலோ அங்கு நுழைவதாகப் பாவனை செய்பவர்கள், ஆனால் இவர்கள் திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்கள் என்று கூறினார்.
ஏனெனில் இத்தகையவர்கள் இயேசுவின் மகிமையைத் திருடுகின்றனர், தங்களின் சொந்த மகிமையை விரும்புகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, பரிசேயரும் தங்களின் சொந்த மகிமையை விரும்பினர், இயேசு அவர்களிடம், நீங்கள் பிறர் புகழ்வதை விரும்புகின்றீர்கள் என்று கூறினார் என்பதையும் குறிப்பிட்டார்.
இந்நிலை வியாபார மதம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? என்று திருப்பலியில் பங்குகொண்டவர்களிடம் கேள்வி எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ், நான் உனக்கு மகிமை அளிக்கிறேன், நீ எனக்கு மகிமை அளி என்பதாக இது உள்ளது, ஆனால் இத்தகைய மக்கள் இயேசு என்ற உண்மையான வாயில் வழியே நுழையாதவர்கள் என்று மறையுரையாற்றினார்.
இயேசு வாயில் மட்டும் அல்ல, அவர் நம் பயணத்தில் நாம் பின்செல்லவேண்டிய பாதையாகவும் இருக்கிறார் என்றும் கூறிய திருத்தந்தை, இயேசு நம்மை ஏமாற்றமாட்டார், அவர் திருடர் அல்ல, கொள்ளையருமல்ல, அவர் நமக்காகத் தமது வாழ்வைத் தந்தவர் என்றார்.
எனவே அவரிடம், இயேசுவே நீர் உமது வாழ்வை எனக்காகத் தந்தீர், நான் நுழைவதற்குத் தயவுசெய்து கதவைத் திறந்தருளும் என்று நாம் ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடப் பத்திரிகை அலுவலகத்தினர் மற்றும் வத்திக்கான் வானொலியின் பொறியியலாளர்கள் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.