2013-04-20 16:11:51

திருத்தந்தை பிரான்சிஸ் : இரண்டு இந்தியர்கள் உட்பட பத்து தியாக்கோன்களுக்கு அருள்பொழிவு


ஏப்.20,2013. 50வது அனைத்துலக இறையழைத்தல் தினமாகிய இஞ்ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் இரண்டு இந்தியர்கள் உட்பட 10 தியாக்கோன்களை அருள்பணியாளர்களாக அருள்பொழிவு செய்யவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தத் தியாக்கோன்களை அருள்பணியாளர்களாக அருள்பொழிவு செய்யும் திருப்பலியை இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்குத் தொடங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தியாவின் கேரளாவைச் சார்ந்த Sijo Kuttikkattil, ஆந்திராவைச் சார்ந்த Marlapati Granaprakash, இன்னும் 6 இத்தாலியர், ஒரு குரோவேஷியர், ஓர் அர்ஜென்டினா நாட்டவர் என பத்து தியாக்கோன்கள் அருள்பணியாளர்களாக அருள்பொழிவு செய்யப்படவுள்ளனர்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நடந்து கொண்டிருந்தபோது 1963ம் ஆண்டில் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இறையழைத்தல்களுக்காகச் செபிப்பதற்கு அழைப்புவிடுக்கும் இறையழைத்தல் ஞாயிறை உருவாக்கினார். ஆண்டுதோறும் பாஸ்கா காலத்தின் 4ம் ஞாயிறன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏப்ரல் 21, இஞ்ஞாயிறன்று “இறையழைத்தல்கள், விசுவாசத்தில் வேரூன்றப்பட்ட நம்பிக்கையின் அடையாளம்” என்ற தலைப்பில் 50வது இறையழைத்தல் ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.