2013-04-20 16:13:20

டெக்சஸ் உர ஆலை வெடி விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் ஆறுதல்


ஏப்.20,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சஸ் மாநிலத்தின் வெஸ்ட்ல் உர ஆலையில் இடம்பெற்ற பயங்கர வெடி விபத்தினால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் மிகுந்த கவலை கொண்டுள்ளார் என, திருத்தந்தை பெயரில் அந்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள இரங்கல் செய்தி கூறுகிறது.
Austin ஆயர் Joe S. Vasquez அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், இவ்வெடி விபத்தில் இறந்தவர்களின் நிறைசாந்திக்கானத் திருத்தந்தையின் செபமும், இதில் காயமடைந்தவர்களுக்கானத் திருத்தந்தையின் ஆறுதலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், மீட்புப்பணிகளில் தாராள உள்ளத்துடன் தொடர்ந்து செயல்பட்டுவரும் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்குமாறு திருத்தந்தை செபிப்பதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இவ்விபத்தில், குறைந்தது 14 பேர் இறந்துள்ளனர் மற்றும் 150க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என நம்பப்படுகின்றது. பல வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
அந்த ஆலைக்கு அருகில் இருந்த அடுக்குமாடி கட்டிடம், 80 வீடுகள், மருத்துவமனை ஆகியவை பலத்த சேதமடைந்துள்ளன. வெடி விபத்தின் அதிர்வுகள், உர ஆலையிலிருந்து 50 மைல் தூரம்வரை உணரப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.