2013-04-20 16:19:02

சண்டைகள் இடம்பெறும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்செயல்கள் நிறுத்தப்படுவதற்கு பேராயர் சுள்ளிக்காட் வேண்டுகோள்


ஏப்.20,2013. ஆயுதம் ஏந்திய மோதல்களில் இடம்பெறும் மிருகத்தனமான பாலியல் வன்கொடுமைகள் நிறுத்தப்படுவதற்கு அனைத்து அரசுகளும் அனைத்துலக சமுதாயமும் தங்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு முயற்சிகளை எடுக்குமாறு திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.
பெண்கள், அமைதி, பாதுகாப்பு ஆகியவை குறித்து ஐ.நா.பாதுகாப்பு அவையில் இவ்வாரத்தில் இடம்பெற்ற திறந்த விவாதத்தில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட், சண்டைகள் இடம்பெறும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்செயல்கள் குறித்து விளக்கினார்.
பாலியல் வன்கொடுமைகள் நிறுத்தப்படவும், இக்குற்றங்களைச் செய்தவர்கள் தண்டிக்கப்படவும், இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படவும் வேண்டுமென நாடுகளின் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார் பேராயர் சுள்ளிக்காட்.
மாலி, காங்கோ, ருவாண்டா, சிரியா உட்பட உலகில் ஆயுத மோதல்கள் இடம்பெறும் 22 இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்செயல்கள் குறித்து 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா.பாதுகாப்பு அவையில் இந்த விவாதம் நடைபெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.