2013-04-20 14:48:47

உயிர்ப்புக்காலம் 4ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 மாவீரன் அலெக்சாண்டர் ஒருமுறை தன் படையுடன் மக்ரான் என்ற பாலைநிலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். மன்னரின் தாகத்தை அறிந்த இரு தளபதிகள் பல இடங்களில் அலைந்து, அவ்வழியே சென்ற பயணிகளிடம் கெஞ்சி மன்றாடி, தங்கள் தலைக்கவசத்தில் சிறிது தண்ணீர் கொண்டுவந்தனர். அத்தளபதிகளின் விசுவாசத்தை அலெக்சாண்டர் பாராட்டினார். பின்னர், அவர்களிடம், "வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், "இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது" என்று சொன்னார்கள். அலெக்சாண்டர் கவசத்தைக் கையில் எடுத்தார். வீரர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தனர். வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, தனக்கும் தண்ணீர் தேவையில்லை என்று சொல்லியபடி, கவசத்தில் இருந்த நீரை மணலில் ஊற்றினார். துன்பம் என்று வந்தால், தங்களுடன் தலைவனும் சேர்ந்து துன்புறுவார் என்பதை உணர்ந்த வீரர்கள், தங்கள் தலைவனைப் பெருமையுடன் எண்ணி ஆர்ப்பரித்தனர்.

ஒரு தலைவனுக்குத் தேவையான பண்புகள் எவை என்ற கேள்வி எழுந்தால், நிரவாகத் திறமை, அறிவுக் கூர்மை, வீரம் என்ற பண்புகளையே முதலில் எண்ணிப் பார்ப்போம். இளகிய, மென்மையான மனம், மக்களுடன் தன்னையே ஒருவராக இணைக்கும் விருப்பம் போன்ற பண்புகளை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. "எங்கத் தலைவருக்கு ரொம்ப இளகிய மனசு" என்று யாராவது சொன்னால், அதை, கேலி கலந்த ஒரு சிரிப்புத் துணுக்காகவே பார்ப்போம்.
மாவீரன் அலெக்சாண்டரைப்பற்றி நாம் பகிர்ந்த இந்த நிகழ்வில், அவரது இளகிய, மென்மையான மனமும், வீரர்களுடன் தன்னையே ஒருவராக இணைத்துக்கொள்ளும் தியாகமும் தெளிவாகின்றன. உலகத் தலைவர்களிடம் இத்தகையப் பண்புகளை எதிர்பார்ப்பது செயற்கையானது, வீணானது என்பது நமது உறுதியான எண்ணம். உலகின் அரசியல் மற்றும் வர்த்தகத்தலைவர்கள், தலைமைத்துவத்தைப்பற்றி உருவாக்கித் தந்துள்ள தவறான இலக்கணம் இவ்விதம் நம்மை எண்ணத் தூண்டுகிறது.

இதில் பொதிந்துள்ள மற்றொரு ஆபத்து என்னவென்றால், உலகத் தலைவர்களிடம் காணப்படும் நிர்வாகத்திறமை, அறிவுக்கூர்மை போன்ற பண்புகளையே ஆன்மீகத் தலைவர்களிடம், மதத் தலைவர்களிடம், திருஅவைத் தலைவர்களிடம் நாம் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டோம். தலைவர்களுக்குரிய பண்புகள் என்று மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித்தரும் பாடங்களை ஆன்மீகத் தலைவர்களும் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற போக்கும் உருவாகி வருவதைக் காணமுடிகிறது. ஆபத்தான இந்தப் போக்கிற்கு ஒரு மாற்றாக, ஆன்மீகத் தலைவர்களிடம் நாம் எவ்வகைப் பண்புகளை எதிர்பார்க்கவேண்டும் என்பதைச் சிந்திக்க இந்த ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

உயிர்ப்புக் காலத்தின் 4ம் ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஞாயிறு, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாள் என்றும் அழைக்கப்படுகிறது. 1963ம் ஆண்டு திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த நாளின் பொன்விழா, இந்த நம்பிக்கை ஆண்டில் கொண்டாடப்படுகிறது. அத்துடன், ஏப்ரல் 21, இந்த ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், பத்து தியாக்கோன்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அருள் பணியாளர்களாகத் திருநிலைப்படுத்துகிறார். நல்லாயன் ஞாயிறு, இறையழைத்தல் ஞாயிறு, இளையோர் அருள்பொழிவு பெறும் ஞாயிறு என்ற எண்ணங்களை எல்லாம் இணைக்கும்போது, திருஅவையின் இன்றையத் தலைவர்கள், நாளையத் தலைவர்கள் ஆகியோரைப்பற்றி சிந்தித்து, செபிக்க அழகியதொரு தருணத்தை இஞ்ஞாயிறு உருவாக்கித் தருகிறது.

திருஅவையின் இன்றையத் தலைவர்களிடமும், நாளையத் தலைவர்களிடமும் நாம் எதிர்பார்க்கும், அல்லது எதிர்பார்க்க வேண்டிய பண்புகள் எவை? இந்தக் கேள்விக்கு புத்தகங்களிலும், கட்டுரைகளிலும் ஏட்டளவு பதில்களைத் தேடாமல், நடைமுறை வாழ்விலிருந்து பதில்களைத் தேட முயல்வோம். நடை முறை வாழ்வில் நாம் தேடும் தலைவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை எண்ணிப்பார்க்கலாம். ஒரு தலைவருக்கு வேண்டிய பண்புகள் எவை என்பதை, கடந்த ஒரு மாத காலமாக, தன் சொல்லாலும், செயலாலும், திருஅவைக்கு மட்டுமல்ல, உலகத் தலைவர்களுக்கும் அவர் பல வழிகளில் உணர்த்தி வருகிறார்.

மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைவராகப் பணியேற்றபோது, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் பல்லாயிர மக்களும், பல உலகத் தலைவர்களும் இந்தப் பணியேற்புத் திருப்பலியில் கலந்துகொள்ள வந்திருந்தனர். திருப்பலிக்கு முன், திறந்த ஒரு 'ஜீப்'பில் அவர் வளாகத்தைச் சுற்றி வந்தபோது, அங்கிருந்த ஒவ்வொருவரையும் கரம்நீட்டி அவரால் தொடமுடியவில்லை என்றாலும், அவரது செய்கைகளாலும், முகத்தில் வெளிப்படுத்திய உணர்வுகளாலும், அம்மக்களின் மனங்களைத் தொட்டார் என்பது தெளிவானது. ஓரிடத்தில், 'ஜீப்'பை நிறுத்தச்சொல்லி, இறங்கிச்சென்றார். அங்கிருந்த ஒரு மாற்றுத் திறனாளியை அரவணைத்து, அவர் நெற்றியில் திருத்தந்தை முத்தமிட்டது, மக்கள் மத்தியில் ஆழ்ந்ததோர் தாக்கத்தை உருவாக்கியது.
கடந்த ஒரு மாதமாக, அவர் மக்களைச் சந்தித்த அத்தனை தருணங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு நேரம் ஒதுக்கி, அவர்களைத் தொட்டு ஆசீர்வதிப்பதை, தன் சந்திப்பின் ஒரு முக்கிய செயலாகவே ஆற்றிவருகிறார். மார்ச் 31, உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு வளாகத்தில் மீண்டும் ஒருமுறை வலம் வந்தபோது, மாற்றுத் திறனாளியான Dominic Gondreau என்ற 8 வயது சிறுவனை அணைத்து முத்தமிட்டது, பல கோடி மக்களின் மனதில் பதிந்த ஓர் அழகிய காட்சியாக அமைந்தது. "கடவுள் எங்கள் குடும்பத்தை அணைத்து அளித்த ஒரு முத்தமாக இதைக் கருதுகிறோம்" என்று Dominicகின் தாய் Christiana கூறியுள்ளார்.

தன் இளகிய, மென்மையான மனதையும், மக்களோடு தன்னை இணைத்துக்கொள்ள விழையும் ஆவலையும் செயல்வழி வெளிப்படுத்தும் திருத்தந்தை, தலைமைப் பணியேற்றத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில், தலைமைப் பணியின் இலக்கணத்தை வரையறுத்தார். தலைவர் ஒரு பாதுகாவலர் என்ற கோணத்தில், புனித யோசேப்பு, புனித பேதுரு ஆகியோரை எடுத்துக்காட்டாக மக்களுக்குச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை. தலைமைத்துவம், ஒரு பணியே அன்றி, பதவியோ, அதிகாரமோ அல்ல என்பதை தெளிவாக்கினார். தலைவர், அல்லது காவலர் என்பவர் இளகிய, மென்மையான மனம் கொண்டவராக இருக்கத் தயங்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். இதோ, திருத்தந்தை ஆற்றிய மறையுரையிலிருந்து ஒரு சில எண்ணங்கள்:

பொருளாதாரம், அரசியல் மற்றும் சமுதாயத் தளங்களில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தலைவர்களுக்கும், அனைத்து நல்மனம் கொண்டோருக்கும் நான் சிறப்பான ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். கடவுளின் திட்டம் ஆழப் பதிந்துள்ள படைப்பின் பாதுகாவலர்களாக நாம் இருப்போம். நன்மைத்தனத்தையும், மென்மையான உணர்வுகளையும் கண்டு நாம் அஞ்சக்கூடாது.
பாதுகாவல் என்ற பணிக்கு, நன்மைத்தனமும், மென்மையும் கொண்டிருப்பது அவசியம். மென்மையான மனது கொண்டிருப்பதை வலுவிழந்த நிலையாகக் காண்பது தவறு, மென்மை உணர்வுகள் கொண்டோரிடமே, கனிவு, கருணை, பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்ற நற்பண்புகள் காணப்படும். எனவே, நன்மைத்தனத்தையும், மென்மையான உணர்வுகளையும் கண்டு நாம் அஞ்சக்கூடாது.
புனித யோசேப்புவின் பெருவிழாவுடன், உரோம் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பணியின் துவக்கவிழாவையும் இன்று நாம் கொண்டாடுகிறோம். பேதுருவின் வழித்தோன்றல் என்ற நிலை அதிகாரமுள்ள ஒரு நிலை. இயேசு பேதுருவுக்கு அதிகாரம் அளித்தார். ஆனால், அது, எவ்வகை அதிகாரம்?
பணிபுரிவதே உண்மையான அதிகாரம். இந்தப் பணியில் தன்னை முழுவதும் இணைத்து, சிலுவையில் இறுதியில் இணைவதே திருத்தந்தையின் அதிகாரம். சிறப்பாக, மனுக்குலத்தில் வறியோர், வலுவிழந்தோர், எவ்வகையிலும் முக்கியத்துவம் பெறாதோர் திருத்தந்தையின் பணியில் முதலிடம் பெறவேண்டும். அன்புடன் பணிபுரிபவர்களால் மட்டுமே அகிலத்தைப் பாதுகாக்க முடியும்.

மக்களைப் போலவே தானும் ஒரு பாவி என்பதையும், மக்களோடு பயணம் செய்யும் ஒரு பயணி என்பதையும் அடிக்கடி கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் தனக்காகச் செபிக்கவேண்டும் என்பதையும், தன் உரைகளில் கூற மறப்பதில்லை.
மக்களில் ஒருவராகத் தன்னை கரைத்துக்கொள்ளாத அருள் பணியாளர்கள் வாழ்வு பயனற்றது என்பதையும், மக்களிடமிருந்து விலகி, ஒரு தீவாக வாழும்போது அருள் பணியாளர்கள் விரக்தி அடைகின்றனர் என்பதையும் புனித வியாழனன்று ஆற்றிய காலைத் திருப்பலியில் அழுத்தந்திருத்தமாகக் கூறினார் திருத்தந்தை. அன்று மாலை, அவர் உரோம் நகரில் உள்ள Casal del Marmo எனும் இல்லத்தில், வளர் இளம் கைதிகளுக்குத் இயேசுவின் இறுதி இரவுணவுத் திருப்பலியாற்றியபோது, அவர்கள் காலடிகளைக் கழுவினார். சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட இளையோரை ஒரு நல்ல ஆயனாகத் தேடிச்சென்று அவர்களுக்குரிய மதிப்பை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த முயற்சி, அமெரிக்காவின் Los Angeles நகரில் உள்ள வளர் இளம் கைதிகளின் மனதைப் பெரிதும் ஈர்த்தது. அவர்களில் பலர் திருத்தந்தைக்கு மடல்கள் எழுதியுள்ளனர். இதோ, அக்கடிதங்களில் சில:

அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ்,
இத்தாலியில் எங்களைப் போல் சிறையில் இருக்கும் இளையோரின் காலடிகளை நீங்கள் கழுவியதற்காக நன்றி. சமுதாயம் எங்கள் மீது நம்பிக்கை இழந்தபோதிலும், நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி.

அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ்,
நான் கடந்து வந்த வாழ்வைப் போல ஓர் அனுபவம் உங்களுக்கு இருந்ததா என்பதை அறியேன். போதைப் பொருளிலும், வன்முறையிலும் ஊறிய குழுக்கள் அடங்கிய காட்டில் நான் பிறந்து வளர்ந்தேன். சிறுவயது முதல் கொலைகளைப் பார்த்துப் பழகியவன் நான். இளவயதில் இத்தகைய இருளால் சூழப்படுவது மிகவும் கடினமாக உள்ளது. ஒரு நாள் எனக்கு விடுதலை கிடைத்து, நானும் உங்களைப் போல் மற்ற இளையோருக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ்,
என்னைப் போன்ற ஓர் இளைஞனின் காலடிகளை நீர் கழுவுகின்றீர். போதைப் பொருளுக்கு அடிமையானவன் நான். தற்போது அதிலிருந்து விடுதலை பெற எங்களில் பலர் முயன்று வருகிறோம். நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளீர்கள். இப்பழக்கத்தைக் கைவிடவும், போதைக்கு அடிமையான மற்றவர்களைக் காப்பாற்றவும் நான் முயற்சிகள் எடுப்பேன்.

அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ்,
நான் ஒரு கத்தோலிக்கனாகப் பிறந்து வளர்ந்தேன். உங்களைப் போல் ஒரு திருத்தந்தை இருப்பதால், கத்தோலிக்கன் என்று சொல்லிக்கொள்வதில் இப்போது நான் மகிழ்கிறேன். வன்முறையில் மூழ்கியுள்ள இவ்வுலகில் உங்களைப் போன்ற எடுத்துக்காட்டுகள் தேவை. உங்களுக்காகச் சிறப்பாகச் செபிக்கிறேன்.

நல்லாயன் ஞாயிறு, இறையழைத்தல் ஞாயிறு, இளையோர் திருநிலை பெறும் ஞாயிறு என்ற மூன்று எண்ணங்களையும் இணைத்துச் சிந்திக்கும் இந்த நாளில், நல்ல ஆயர்களாக தங்கள் வாழ்வாலும், மரணத்தாலும் சான்று பகர்ந்த இரு அருள் பணியாளர்களின் எடுத்துக்காட்டுகளுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

பத்து நாட்களுக்கு முன், ஏப்ரல் 11, அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா, அமெரிக்க இராணுவத்தில் மிக உயரிய விருது ஒன்றை மறைந்த அருள் பணியாளர் Emil Kapaun அவர்களுக்கு வழங்கினார். வீரத்துடன் போரிட்டு, எதிரிகளை வீழ்த்தி, வெற்றிபெறும் வீரர்களுக்கு பொதுவாக வழங்கப்படும் விருது இது. ஆனால், தன் இராணுவப் பணியில் ஒரு நாளும் ஆயுதங்களைப் பயன்படுத்தாத அருள் பணியாளர் Emil Kapaun, கோரிய போரில் வீரர்கள் மத்தியில் ஆற்றிய ஆன்மீகப் பணிகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருது வழங்கும் நிகழ்வில், அரசுத்தலைவர் ஒபாமா தன் உரையில் கூறியது இதுதான்: "துப்பாக்கியால் ஒரு முறை கூட சுடாத ஓர் அமெரிக்க வீரரை இன்று நாம் கௌரவப்படுத்துகிறோம். அருள் பணியாளர் Emil Kapaun இராணுவத்தில் பணியாற்றியபோது பயன்படுத்திய ஒரே ஆயுதம் அன்பு - தன் நண்பருக்காக உயிரைத் தந்த அன்பு" என்று கூறினார் ஒபாமா.

அருள் பணியாளர் Emil Kapaun பங்கேற்ற அதே கொரியப் போரில் மற்றொரு அருள் பணியாளரைக் குறித்து சொல்லப்படும் உண்மைச் சம்பவம் இது. அப்போரில் காயப்பட்டு, உயிருக்குப் போராடிவந்த ஒரு வீரர், இறப்பதற்கு முன், ஒரு குருவிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெறவேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டார். அவருக்கு மருத்துவ உதவிகள் செய்தவர் திகைத்தார். இந்தப் போர்க்களத்தில் குருவுக்கு எங்கே போவது? என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்தபோது, அந்த வீரனுக்கு அருகில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த மற்றொரு வீரர், "நான் ஒரு குரு" என்று தன்னையே அறிமுகப்படுத்தினார். அவரது நிலையைக் கண்ட மருத்துவர், "நீங்கள் அசையாதீர்கள். அசைந்தால், உங்கள் உயிருக்குப் பெரும் ஆபத்து." என்று அந்த குருவிடம் எச்சரித்தார். அதற்கு அந்த குரு, "நான் வாழப்போகும் இந்த ஒரு சில மணித்துளிகளை விட, என் நண்பரின் ஆன்மா மிகவும் முக்கியம்." என்று சொன்னபடி, தன்னிடம் எஞ்சியிருந்த சக்தியை எல்லாம் திரட்டி, தரையோடு தரையாக ஊர்ந்து வந்தார். சாகும் நிலையில் இருந்த அந்த வீரனின் இறுதி நேரத்தில் அவருக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கினார். அந்த வீரனும், குருவும் அமைதியாக இறந்தனர்.

தலைவராக இருப்பதற்குத் தேவையானவை, கனிவு, பரிவு, பணிவு, எளிமை என்ற உண்மையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப்பணியில் கழித்த முதல் மாதத்தில் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். தன் சொல்லாலும், செயலாலும் நல்லாயன் கிறிஸ்து கூறிய இத்தகையத் தலைமைத்துவப் பண்புகளுக்கு திருஅவைத் தலைவர்களும், அருள் பணியாளர்களும், துறவியரும் தங்கள் வாழ்வில் முக்கியத்துவம் கொடுத்தால், இறைவனின் அழைப்பை ஏற்க இன்னும் பல்லாயிரம் இளையோர் தாங்களாகவே முன்வருவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இத்தகைய புது வசந்தம் கிறிஸ்தவ சமுதாயத்தில் உருவாக இறைவனை இறைஞ்சுவோம்.
ஏப்ரல், மே மாதங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நேரம். பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை இன்று சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசு விடுக்கும் இறை அழைத்தலை ஏற்று, மக்கள் பணிக்குத் தங்களையே அளிக்க முன்வரும் இளையோரை இறைவன் வழிநடத்த வேண்டுமென்று மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.