2013-04-20 16:20:43

TEDx கருத்தரங்கில் கர்தினால் ரவாசி : உலகில் 65 விழுக்காட்டு மக்களுக்கு சமய சுதந்திரம் கிடையாது


ஏப்.20,2013. நீதி மற்றும் அமைதியில் ஒரு சமுதாயத்தை அமைப்பதற்கு சமய சுதந்திரம் இன்றியமையாதது என்று திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்ஃபிராங்கோ ரவாசி கூறினார்.
தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, வண்ண வடிவமைப்பு என்ற TEDx என்ற பெயரில் இவ்வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் ரவாசி, இன்று உலகில் 65 விழுக்காட்டு மக்களுக்கு சமய சுதந்திரம் கிடையாது என்று கூறினார்.
சமய சுதந்திரம் என்பது விருப்பப்படித் தேர்வு செய்வது அல்ல, ஆனால் அது சமுதாய வாழ்வுக்கு இன்றியமையாதது என்றுரைத்த கர்தினால் ரவாசி, அறிவியலும் விசுவாசமும் ஒன்றோடொன்று முரண்பட்டதல்ல என்றும் கூறினார்.
"உலகில் இன்று சமய சுதந்திரம்" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் உரையாற்றிய ஆய்வாளர் Brian Grim, இன்று உலகில் ஏறக்குறைய 50 கோடி மக்களின் சமய சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
800க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இக்கருத்தரங்கில், இடிந்து விழுந்த நியூயார்க் வர்த்தகக் கோபுரங்களின் இடத்தில் உருவாக்கப்படும் 'விடுதலை கோபுரத்தை' வடிவமைத்த David Libeskind, Gloria Estefan என்ற புகழ்பெற்ற பாடகர், Vlade Divac என்ற புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரர், ஆகியோர் உட்பட பல முக்கிய பேச்சாளர்கள் பங்கு பெற்றனர்.
TEDx கருத்தரங்குகள், 1984ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் துவக்கப்பட்டன. புகழ்பெற்ற இக்கருத்தரங்குகளின் ஒரு கிளையாக உருவாக்கப்பட்ட TEDx கருத்தரங்குகள் இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளிலும் அண்மைய ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.