2013-04-19 15:59:42

திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவின் வார்த்தை நம் அறிவு வழியாக இதயத்தை நேரிடையாகச் சென்றடைகின்றது


ஏப்.19,2013. இறைவன் திருஅவையை அனைத்துத் தனிமனிதக் கருத்துக்கோட்பாட்டு விளக்கங்களிலிருந்து விடுவித்து, எளிமையான நற்செய்திக்கு வழிநடத்துவாராக என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
அன்பு பற்றிப் பேசும் மற்றும் அன்பைக் கொண்டுவரும் அழகான தூய்மையான நற்செய்திக்கு இறைவன் திருஅவையை வழிநடத்துவாராக என்று உரைத்த திருத்தந்தை, தனிமனிதப்போக்கின்படி நற்செய்திக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விளக்கமும் தவறானது என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாப்பிறைத் தலைமைப்பணியை ஏற்று ஏப்ரல் 19 இவ்வெள்ளியன்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளவேளை, இந்நாளின் காலையில் புனித மார்த்தா இல்லத்தில் வத்திக்கானின் அச்சகத்துறையினர் மற்றும் L'Osservatore Romano நாளிதழ்ப் பணியாளர்க்கு நிகழ்த்திய திருப்பலியில், திருஅவைக்காகவும், இதயங்களின் மனமாற்றத்திற்காகவும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
புனித பவுலின் மனமாற்றம், கப்பர்நகூம் தொழுகைக்கூடத்தில் இயேசுவின் உரை ஆகிய இரண்டு விவிலியப் பகுதிகளை மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் வார்த்தை அன்பின் வார்த்தை என்பதால் அதனைத் தாழ்மையான இதயத்தோடு ஏற்க வேண்டும், இவ்வார்த்தை நம் அறிவின் வழியாக நுழைந்து நேரடியாக இதயத்துக்குச் செல்கின்றது என்றும் கூறினார்.
ஆயினும், தங்களது அறிவால்மட்டும் புரிந்துகொண்ட நற்செய்தியை நடைமுறைப்படுத்த விரும்புகிறவர்களும் இருக்கிறார்கள், இவர்கள் பெரிய கருத்தியல்வாதிகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இறைவார்த்தையைப் பணிவான, திறந்த உள்ளத்துடன் ஏற்ற அன்னைமரியா, எசாயா, எரேமியா, மோசே போன்றவர்களைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இறைவார்த்தைக்கு அறிவுப்பூர்வமாகப் பதிலளித்த மறைநூல் அறிஞர்கள், இறைவார்த்தை இதயத்துக்குச் செல்கின்றது மற்றும் மனமாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்பதை அறியாமல் இருந்தவர்கள் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.