2013-04-19 16:10:31

ஏப்ரல் 20, 2013. கற்றனைத்தூறும் ... திராட்சை


திராட்சையைத் தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைப்பர். கனிகளின் இளவரசி என்ற பெயர் திராட்சைக்கு உண்டு. இது கறுப்பு, கடும் நீலம், மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு எனப் பல நிறங்களில் காணப்படுகின்றது. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லாத் திராட்சை எனப் பல வகையுண்டு.
துவக்க காலத்திருந்தே திராட்சை மனிதரால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மத்தியத் தரைக்கடல் நாடுகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திராட்சைச் சாறிலிருந்து இரசம் தயாரிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. விவிலியத்திலும் இது குறித்து காண்கிறோம். அனைத்து வகை திராட்சைகளும் அப்படியே உண்ணத் தக்கவைதான். ஒரு சில வகைகள் உலர் திராட்சை செய்யவும், சாறு எடுக்கவும், பழக்கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பான்மையானவை திராட்சை இரசம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உலகின் மொத்த திராட்சை உற்பத்தியில் 71% திராட்சை இரசம் தயாரிப்புக்காகப் பயன்படுகிறது, 27% நேரடியாகப் பழமாக உட்கொள்ளப்படுகிறது, 2% உலர் பழமாக்கப்படுகிறது.
திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம். தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் முதலானவையும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன. 100 கிராம் திராட்சைப் பழம் 69 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. இதில் கெட்ட கொழுப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'வைட்டமின்-சி', 'வைட்டமின்-ஏ', 'வைட்டமின்-கே' மற்றும் பீ-காம்ப்ளக்ஸ் குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயமின் போன்றவையும் திராட்சையில் கிடைக்கிறது. திராட்சை பல சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது.
உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் தகவலின்படி, உலகில் 75,866 சதுர கிலோமீட்டர்களில் திராட்சை பயிர்ச் செய்யப்படுகிறது. திராட்சைத் தோட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் ஆண்டுக்கு 2% என்ற அளவில் அதிகரித்து வருகின்றன. இஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, துருக்கி, அமெரிக்க ஐக்கிய நாடு, ஈரான், ருமேனியா, போர்த்துக்கல், ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, லெபனான் ஆகிய நாடுகளில் திராட்சை அதிகம் பயிரிடப்படுகிறது.

ஆதாரம் - விக்கிபீடியா








All the contents on this site are copyrighted ©.