ஈராக் நாட்டில் இடம்பெறும் உள்ளூர் தேர்தலில் கிறிஸ்தவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்
- பாபிலோனிய முதுபெரும் தலைவர்
ஏப்.17,2013. ஏப்ரல் 20, வருகிற சனிக்கிழமை ஈராக் நாட்டில் இடம்பெறும் உள்ளூர் தேர்தலில்
கிறிஸ்தவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என்று கல்தேய வழிபாட்டு முறையைச்
சேர்ந்த பாபிலோனிய முதுபெரும் தலைவர் முதலாம் Louis Raphael Sako அந்நாட்டு மக்களுக்கு
அழைப்பு விடுத்துள்ளார். ஈராக் நாட்டின் வரலாற்றில் வேரூன்றியுள்ள கிறிஸ்தவக் கலாச்சாரத்தில்
பிறந்த அனைவருக்கும், அந்நாட்டை வளர்க்கவும், உயர்த்தவும் கடமை உள்ளது என்பதை முதுபெரும்
தலைவரின் செய்தி வலியுறுத்துகின்றது. தேர்தலில் கலந்துகொண்டு, நாட்டின் ஒற்றுமைக்கு
உழைப்பது அனைத்து கிறிஸ்தவர்களின் கடமை என்பதை எடுத்துரைக்கும் முதுபெரும் தலைவர், திருஅவை
என்ற முறையில் மக்கள் யாருக்கு வாக்கு வழங்கவேண்டும் என்ற அரசியலில் பங்கேற்பது தங்கள்
பணியல்ல என்பதையும் தெளிவுபடுத்தினார். 2011ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகள்
ஈராக் நாட்டைவிட்டு விலக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.