2013-04-17 16:38:41

இறைவன் நம்மை வரவேற்க எப்போதும் காத்திருக்கிறார் என்ற செய்தியைத் திருத்தந்தை மக்களிடையே ஆழமாகப் பதித்துள்ளார் - கர்தினால் Angelo Comastri


ஏப்.17,2013. இறைவன் திருஅவையை அற்புதமான முறையில் வழிநடத்துகிறார் என்பதற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தெரிவு மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருத்தந்தையின் சார்பில் வத்திக்கான் நகரின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றும் கர்தினால் Angelo Comastri அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றியுள்ள முதல் 33 நாட்களைக் குறித்து வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
உலகின் எல்லைகளே கத்தோலிக்கத் திருஅவையின் எல்லைகள் என்ற கண்ணோட்டத்தில் காணும்போது, உலகின் ஒரு கோடியிலிருந்து திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதியத் திருத்தந்தை, முதல் முறை மக்கள் முன் தோன்றியதே ஓர் ஆன்மீக அனுபவமாக இருந்தது என்று கர்தினால் Comastri நினைவுகூர்ந்தார்.
திருத்தந்தையின் முதல் மாதப் பணிகளின் தனித்துவம் குறித்து, நாளிதழ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் Comastri அவர்கள், அன்பும், கருணையும் மிகுந்த இறைவன் நம்மை வரவேற்க எப்போதும் காத்திருக்கிறார் என்ற செய்தியைத் திருத்தந்தை மக்களிடையே ஆழமாகப் பதித்துள்ளார் என்று கூறினார்.
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு, காயப்பட்டிருந்த இளையோரின் பாதங்களைக் கழுவியது, மாற்றுத் திறனாளிகளை அரவணைத்தது போன்ற அன்புச் செயல்களால் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இருள் சூழ்ந்திருக்கும் மக்கள் மனதில் ஒளியைக் கொணரந்துள்ளார் என்றும் கர்தினால் Comastri அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.