2013-04-17 16:43:26

ஆர்ஜென்டினா இளையோரை வீரர்களாக மாற்றுவது போர் அல்ல, மாறாக, அன்பே - அந்நாட்டு ஆயர்கள்


ஏப்.17,2013. ஆர்ஜென்டினா நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது இளையோர் மேற்கொண்ட துயர் துடைப்புப் பணிகள் அமைதியான ஒரு புரட்சியாகவே அமைந்தன என்று அந்நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
ஏப்ரல் மாதத் துவக்கத்தில் ஆர்ஜென்டினாவின் தலைநகர் Buenos Airesஐத் தாக்கிய புயல், வெள்ளம் ஆகிய இயற்கை இடர்பாடுகளின்போது, இளையோர் பலர் இரவு பகலாக உழைத்தது, பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது என்று La Plata உயர்மறைமாவட்ட துணை ஆயர்கள் Nicolas Baisi, மற்றும் Alberto Bochatey ஆகிய இருவரும் Fides செய்திக்கு அனுப்பியுள்ள குறிப்பில் கூறியுள்ளனர்.
La Plataவின் குருமடம் ஐந்தடி நீரில் மூழ்கியிருந்தாலும், குருமடத்திற்கு அருகில் இருந்த பகுதிகள் அதைவிட அதிகம் பாதிக்கப்பட்டதால், அங்கு வாழ்வோரை குருமடத்தில் இரவு தங்க வைத்ததை ஆயர் Bochatey சிறப்பாக நினைவு கூர்ந்தார்.
இளையோரை வீரர்களாக மாற்றுவது போர் அல்ல, மாறாக, அன்பே என்பதை அண்மைய வெள்ளம் நன்கு உணர்த்திச் சென்றது என்று ஆயர் Baisi கூறினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.