2013-04-16 15:03:00

விவிலியத் தேடல் – 'நல்ல சமாரியர்' உவமை: பகுதி 9


RealAudioMP3 எருசலேமுக்கும் எரிகோவுக்கும் இடைப்பட்ட சாலையோரத்தில் பாழடைந்து கிடந்த ஓர் ஆலயம், சமாரியர் ஒருவரால் அர்ச்சிக்கப்பட்டது... ஆம். இந்த எண்ணத்துடன் சென்ற விவிலியத் தேடலை நாம் நிறைவு செய்தோம். வழியோரம் அடிபட்டுக் கிடந்த உயிருள்ள ஆலயமான ஒரு மனிதருக்கு, ஒரு குருவும், ஒரு லேவியரும் ஆற்ற மறந்த, அல்லது மறுத்த ஓர் உதவியை ஒரு சமாரியர் செய்தார்.
இயேசு இம்மூவரையும் அறிமுகப்படுத்தும் வார்த்தைகளில் சிறிய, ஆனால், அதே நேரம் முக்கியமான வேறுபாடுகளை லூக்கா நற்செய்தி 10ம் பிரிவில் 31,32,33 ஆகிய இறை சொற்றொடர்களில் காண முடிகிறது.
மறுபக்கமாக விலகிச்செல்வதில், குருவும், லேவியரும் ஒரேவிதமாகச் செயல்பட்டாலும், அடிபட்டிருந்தவரை இவர்கள் இருவரும் பார்த்த விதத்தில் ஒரு வேறுபாட்டைக் கூறுகிறார் இயேசு. குரு போகிற போக்கில் அவரைக் கண்டார், விலகிச் சென்றார். லேவியரோ அவ்விடத்துக்கு வந்தார், கண்டார், பின்னர் விலகிச் சென்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அடுத்ததாக வந்த சமாரியரோ, அருகில் வந்தார், கண்டார், பரிவு கொண்டார்... அம்மூவரின் விழிகளிலும் பதிந்த காட்சி ஒன்றுதான். ஆனால், செயல்களில் மாற்றத்தை உருவாக்கியது எது? கண்கள் அல்ல, இதயம். இதயத்தில் உருவான பரிவு சமாரியரைச் செயலில் ஈடுபட வைத்தது.

ஊனக் கண்களால் நாம் காண்பது ஒரே காட்சிதான் என்றாலும் உள்ளக் கண்களால் நாம் காண்பது என்ன என்பதைப் பொறுத்து வேறுபாடுகள் எழும். சாலையில் நடக்கும் விபத்து ஒன்றை எண்ணிப் பார்ப்போம். விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் மனிதரைச் சுற்றி கூடும் கூட்டத்தில் எத்தனை வகையான பார்வைகள்... காவல் துறையைச் சேர்ந்தவர் பார்க்கும் பார்வை... யார் மீது குற்றம் என்பதைப் பதிவுசெய்யும் பார்வை. பத்திரிகை நிருபரின் பார்வை... பல கோணங்களில் விபத்தைப் படம்பிடிக்கும் பார்வை. இரத்தத்தைக் கண்டு, மறுபக்கம் திரும்பிவிடும் பார்வைகளும் அக்கூட்டத்தில் இருக்கும்... இவ்வாறு, சுற்றி நிற்கும் கூட்டத்தில் எத்தனை விதமான பார்வைகள்!
நம்மையும் அக்கூட்டத்தில் ஒருவராக இணைத்துப் பார்ப்போம். விபத்து நடந்த இடம், நாம் தங்கியிருக்கும் பகுதி என்றால், நமது பார்வை இன்னும் கூர்மை பெறும்... காரணம் என்ன? அடிபட்டிருப்பவர் நமக்குத் தெரிந்தவராக, அல்லது நமது உறவுகளில் ஒருவராக இருக்கலாம் என்ற பரிதவிப்பு, அடிபட்டிருப்பவரின் அருகில் நம்மைத் தள்ளிச் செல்லும்.
அவ்வேளையில், அப்பக்கம் வரும் ஒரு மனிதர் வேறு எந்த எண்ணமும் இல்லாமல், உடனே முதலுதவிகள் செய்ய முனைவதையும் நாம் காணலாம். விழிகளில் பதியும் காட்சி ஒன்றுதான் என்றாலும், அந்தக் காட்சி மனதில் உருவாக்கும் எண்ணங்கள், உணர்வுகள் இவையே நம்மைச் செயலிழக்கச் செய்யும், அல்லது செயலுக்குத் தூண்டும்.

செயலாற்றத் தூண்டப்பட்ட சமாரியர், அடிபட்டிருந்தவருக்கு முதலுதவிகள் செய்தார். அவர் காயங்களில் திராட்சை மதுவும், எண்ணெயும் வார்த்தார். இந்தச் செயலை, ஒரு கோவிலைப் புனிதப்படுத்தும் சடங்குக்கு ஒப்புமைப்படுத்தி சென்ற விவிலியத் தேடலில் நாம் சிந்தித்தோம். காயங்களில் மதுவும், எண்ணெயும் ஊற்றியபின், அக்காயங்களை அவர் கட்டினார் என்றும், அதற்குப்பின், தாம் பயணம் செய்துவந்த விலங்கின் மீது அடிபட்டிருந்தவரை ஏற்றினார் என்றும் இயேசு விவரிக்கிறார்.

இவ்வுவமையில் சமாரியர் அறிமுகமானதிலிருந்து அவர் ஆற்றியச் செயல்களையெல்லாம் ஒருங்கே திரட்டினால், சமாரியரைப் பற்றிய மற்றொரு தெளிவு பிறக்கிறது. எருசலேம் எரிகோ பாதையில் ஒரு வர்த்தகராக அவர் சென்றிருக்க வேண்டும் என்பதே அந்தத் தெளிவு. திராட்சை மதுவும், எண்ணெயும் விற்பதற்காகச் சென்றவர் அந்தச் சமாரியர். கணிசமான அளவு இவற்றை அவர் எடுத்துச் சென்றதால், ஒரு விலங்கும் உடன் சென்றது. மேலே கூறப்பட்டுள்ள விவரங்களை ஒன்று திரட்டினால், அவ்வழியாக வந்த சமாரியர் வசதி வாய்ந்தவர் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

கள்வர் பயம் அதிகம் உள்ள அப்பகுதியில், தான், தனது பாதுகாப்பு, தனது பொருட்களின் பாதுகாப்பு ஆகிய இவற்றைப்பற்றி மட்டும் சிந்தித்தவராக அச்சமாரியர் செயல்பட்டிருந்தால், அக்குருவையும், லேவியரையும் விட, அவர்தான் மிக அவசரமாக அப்பாதையைக் கடந்திருக்கவேண்டும். ஆனால், நடந்தது என்ன? அவர் தன்னையும், தன் வர்த்தகப் பொருட்களையும், விலங்குகளையும் ஆபத்துக்கு இலக்காக்குகிறார். அவரை ஆபத்து சூழ்ந்துள்ளது என்பதையே அவர் உணர்ந்தாரா என்பது சந்தேகம்தான். ஏனெனில், அவர் எண்ணங்களை, மனதை, சூழ்ந்ததேல்லாம் பரிவு ஒன்றே.
ஆஸ்திரேலிய கவிஞர் Henry Lawson இந்த உவமையைக் கவிதையாக வடித்துள்ளார். அந்தக் கவிதையில் சமாரியரை அவர் விவரிக்கும் வரிகள் இவைதாம்:

அவர் ஒரு முட்டாள்.
அவர் நினைத்திருந்தால், செல்வம் குவித்திருக்கலாம்
ஆனால், தேவையில் உள்ள அடுத்தவரை
கடந்து செல்ல இயலாதவர் அவர்.

அவரைக் கண்ட மற்ற வர்த்தகர்கள்
அவர் மென்மையானவர் என்று கேலி செய்தனர்
வர்த்தக உலகில் இந்த சமாரியர்
அடிக்கடி கள்வர்களால் காயப்பட்டார்.

மனதை நிறைத்த பரிவைச் செயலாக்க, அவர் தன் வர்த்தகத்திற்காகக் கொண்டு சென்ற மதுவையும், எண்ணெயையும் அடிபட்டவரின் காயங்களில் ஊற்ற ஆரம்பித்தார். காயங்களைக் கட்ட, அவர் தன் ஆடையைத் துண்டுகளாகக் கிழித்திருக்க வேண்டும். அடிபட்டிருந்தவரின் ஆடைகள் ஏற்கனவே கள்வர்களால் பறிக்கப்பட்டனவே!

"அடிபட்டவரின் காயங்களை சமாரியர் கட்டினார்" என்று இயேசு கூறியபோது, இறைவாக்கினர்கள் தங்களுக்கு அடிக்கடி சொன்ன ஓர் உருவகம் சூழ நின்றவர்களின் மனங்களில் எழுந்திருக்கும். அடிபட்ட இஸ்ரயேல் மக்களின் காயங்களை இறைவன் கட்டுவார் என்பதை அடிக்கடி கேட்டு வந்த மக்கள் அவர்கள். இந்தக் கருத்தை வலியுறுத்தும் ஒரு சில இறைவார்த்தைகள் இதோ:

திருப்பாடல் 147: 3
ஆண்டவர் உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.

எசேக்கியல் 34:15-16
நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். காணாமல் போனதைத் தேடுவேன்: அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டுவருவேன்: காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்: நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன்.

ஓசேயா 6:1
வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்: நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்: நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார்.

முதலுதவிகள் செய்ததும், தன் கடமை முடிந்ததென்று எண்ணாமல், தான் துவங்கிய உதவியைத் தொடர்ந்தார் சமாரியர். தான் பயணம் செய்துவந்த விலங்கின் மீது அவரை ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுச் சென்றார். அடிபட்டவரை விலங்கின் மீது ஏற்றி, அருகில் அவரைத் தாங்கியபடியே நடந்த சமாரியரை பல புகழ்பெற்ற ஓவியர்கள் வடிவமைத்துள்ளனர். இந்தக் காட்சி எனக்கு பாரி வள்ளலை நினைவுபடுத்தியது. படர்வதற்குக் கொழுவின்றி கொடியொன்று தவித்தது என்று எண்ணிய பாரி வள்ளல், தான் பயணித்த அரசத் தேரை அக்கொடிக்குக் கொழுவாக விட்டுச்சென்றார். தன்னுடைய சுகங்களை, வசதிகளைக் குறைத்துக்கொண்டு, அடுத்தவருக்கு உதவும் பரந்த உள்ளங்கள் இவை.

அடுத்தவருக்கு உதவி என்பதை பல வழிகளில் செய்யலாம். நமது தேவை போக, அதிகமாக, சேமிப்பில் இருக்கும் செல்வத்திலிருந்து பிறருக்கு உதவிகள் செய்யலாம். வழியில் நம்மிடம் கையேந்தும் மனிதர்களுக்கு நாம் அளிக்கும் தர்மம் இவ்வகையைச் சேரும். அல்லது, நமது தேவைகளைக் குறைத்துக்கொண்டு, அடுத்தவருக்கு உதவிகள் செய்யலாம். “Give till it hurts” என்பது அன்னை தெரேசா அடிக்கடி சொன்ன ஓர் அற்புத அறிவுரை. அதாவது, நமது சுகங்களைக் குறைத்துக்கொண்டு, நம்மை வருத்தும் வரை நாம் கொடுப்பதில்தான் பொருள் உள்ளது என்பது அன்னையின் கருத்து.

தன்னை வருத்தி, அடிபட்டவரைத் தாங்கி நடந்து, சாவடிக்குச் சென்ற சமாரியர், அங்கு சென்றதும், "அப்பாடா, நம் கடமை முடிந்தது" என்று விடைபெறவில்லை. மீண்டும் தன்னை வருத்துகிறார்.
லூக்கா 10: 34-35
அவர் தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, 'இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்' என்றார்.
'மறுநாள்' என்ற ஒரு வார்த்தையின் வழியாக, முந்தைய இரவெல்லாம் அடிபட்டவருடன் சமாரியர் தங்கினார் என்பதை இயேசு அழகாகக் குறிப்பிடுகிறார். அடிபட்டவருடன் செலவிட்ட இரவு தூக்கம் இழந்த இரவாக இருந்திருக்கவேண்டும். தன்னுடைய பணிகளின் கட்டாயத்தால் அடுத்த நாள் அவ்விடம் விட்டுச் செல்லவேண்டும் என்பதை உணரும் சமாரியர், இன்னும் தன் பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்காமல், உதவிகளைத் தொடர்கிறார்.
பரிவுடன், முழு ஈடுபாட்டுடன், அடிபட்டவரை மட்டுமே மையப்படுத்தி, இறுதி வரை அவருக்கு உதவிகள் செய்த சமாரியரின் பணிகளை அழகாக விளக்கியபின், திருச்சட்ட அறிஞரிடம் இயேசு விடுத்த கேள்வியும், அறிஞரின் பதிலும், இறுதியாக இயேசு அறிஞருக்குக் கொடுத்த அறிவுரையும் நமது அடுத்தத் தேடலின் கருப்பொருளாக அமையும்.








All the contents on this site are copyrighted ©.