2013-04-16 16:08:56

கர்தினால் கிரேசியஸ் : திருத்தந்தைக்குத் தாழ்மையுடன் பணி செய்வேன்


ஏப்.16,2013. உலகளாவியத் திருஅவையின் நிர்வாகத்தில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு உதவியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ள கர்தினால்கள் குழுவில் தானும் ஒருவராக நியமிக்கப்பட்டிருப்பதை மிகவும் தாழ்மையுடன் ஏற்பதாகத் தெரிவித்துள்ளார் மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
இந்நியமனம் குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ள கர்தினால் கிரேசியஸ், இந்நியமனப் பணிமூலம் உலகளாவியத் திருஅவைக்கும், திருத்தந்தைக்கும் ஆழ்ந்த நன்றியுடன் பணி செய்வேன் என்று கூறியுள்ளார்.
இக்கர்தினால்கள் குழு, அகிலத்திருஅவையைக் குறித்து நிற்க வேண்டும் என்று திருத்தந்தை விரும்பியதாகவும், இக்குழுவில் உள்ளவர்கள் அனைத்துக் கண்டங்களைச் சார்ந்தவர்கள் எனவும் கர்தினால் கிரேசியஸ் கூறினார்.
ஹொண்டூராஸ், சிலே, இந்தியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, காங்கோ, அமெரிக்க ஐக்கிய நாடு, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8 கர்தினால்கள் கொண்ட குழுவை இம்மாதம் 13ம் தேதி உருவாக்கியுள்ளார் திருத்தந்தை.
உலகின் மூன்று முக்கிய மதங்களுக்குப் பிறப்பிடமான ஆசியாவில், உலகின் கிறிஸ்தவரல்லாதவரில் 85 விழுக்காட்டினரும், உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய 60 விழுக்காட்டினரும் வாழ்கின்றனர். இக்கண்டத்தில் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் என்றும், இங்கு 50 இலட்சம் முதல் 2 கோடிப் பேர்வரை வாழும் 30க்கும் மேற்பட்ட மாநகரங்கள் உள்ளன என்றும் ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.