2013-04-16 16:14:42

இலட்சக்கணக்கான குழந்தைகளின் வாழ்வைக் காப்பாற்றுவதற்கு ஐ.நா. முயற்சி


ஏப்.16,2013. விலைமலிவான மருந்துகளைப் பயன்படுத்துதல், குழந்தை பிறப்புக்குப் பின்னர் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான குழந்தைகளின் வாழ்வைக் காப்பாற்ற முடியும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிதாகப் பிறந்த குழந்தைகளின் நலவாழ்வு குறித்து உலகில் முதன்முறையாக இடம்பெறும் கருத்தரங்குக்குச் செய்தி அனுப்பியுள்ள ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளின் வாழ்வைக் காப்பாற்றுவதற்கு இதில் கலந்து கொள்ளும் நாடுகளின் பிரதிநிதிகள் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.
தென்னாப்ரிக்காவின் Johannesburgல் இத்திங்களன்று தொடங்கியுள்ள 4 நாள் கருத்தரங்கில், நலவாழ்வு அதிகாரிகள், அரசுகளின் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் 50 நாடுகளிலிருந்து கலந்து கொள்கின்றனர்.
தடுத்து நிறுத்தக்கூடிய மற்றும் சிகிச்சைகளால் காப்பாற்றப்படக்கூடிய நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் 30 இலட்சம் குழந்தைகள் பிறந்த மூன்று மாதங்களுக்குள் இறக்கின்றன என்று ஐ.நா.நிறுவனங்கள் கூறுகின்றன.
ஐ.நா.பொதுச்செயலரின் செய்தியை, ஐ.நா.வின் தென்னாப்ரிக்க ஒருங்கிணைப்பாளர் Agostinho Zacarias வாசித்தார்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.