2013-04-15 16:45:21

திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை


ஏப்.15,2013. தடைகளையும் வன்முறைகளையும் தாண்டி இயேசுவுக்குச் சாட்சிகளாக விளங்குவதற்கு உதவும் வலிமையை, முதல் சீடர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்பதை உயிர்த்த கிறிஸ்துவின் அருகாமையும் தூய ஆவியின் செயல்பாடும் விளக்கமுடியும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை அவர்கள், ஆதிகால கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவின் உயிர்ப்புக்கு வழங்கிய சாட்சியத்திற்காக, கசையடிகளையும் சிறைத்தண்டனைகளையும் பெற்றாலும், இயேசுவுக்காகத் துன்புற்றது குறித்து மகிழ்ச்சியே அடைந்தார்கள் என்றார்.
சிலுவையில் அறையுண்டு இறந்து உயிர்த்த கிறிஸ்துவின் மீது அவர்கள் கொண்டிருந்த விசுவாசம் எத்தனை வலிமையானது எனில், அந்த விசுவாசத்திற்காக, துன்பங்களை அனுபவிப்பது, கௌரவம் நிறைந்த விருது என்றே அவர்கள் கருதினர் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உயிர்த்த இயேசுவின் வல்லமையையும் அருகாமையையும் அனுபவிக்கும் எந்த ஒரு கிறிஸ்தவரும் அந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கமுடியாது என்று கூறிய பாப்பிறை, தவறாக புரிந்துகொள்ளுதலையும் எதிர்ப்பையும் நாம் எதிர்கொள்ளும்போது அன்பினாலும் உண்மையின் வல்லமையாலும் அவைகளை எதிர்கொள்ள முதல் சீடர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம் என்றார்.
இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வழங்கிய டுவிட்டர் செய்தியில், 'நாம் கிறிஸ்துவுக்கு சாட்சி பகரவேண்டுமெனில் நாம் போதிப்பதன் சாட்சியாக நம் வாழ்வு இருக்க வேண்டும்', எனவும் 'கடவுளை வழிபடுவது என்பது அவரோடு இணைந்திருப்பதைக் கற்பதும், நம் தவறான கொள்கைகளை கைவிட்டு அவரை நம் வாழ்வின் மையமாக வைப்பதாகும்' எனவும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் - வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.