2013-04-13 16:36:01

ஐ.நா. ஆயுத வியாபாரம் குறித்த ஒப்பந்தத்தைத் துரிதமாகச் செயல்படுத்துமாறு வேண்டுகோள்


ஏப்.13,2013. அனைத்துலக எல்லைகளில் ஆயுத வியாபாரங்களைக் கட்டுப்படுத்தும் ஐ.நா. ஆயுத வியாபாரம் குறித்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கு, துரிதமாக நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுத் தலைவர் அந்நாட்டுத் தலைவர்களைக் கேட்டுள்ளார்.
ஐ.நா. ஆயுத வியாபாரம் குறித்த ஒப்பந்தத்தை விரிவாக ஆய்வு செய்யுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டுச் செயலர் John Kerryக்கு அழைப்பு விடுத்துள்ள ஆயர் Richard E. Pates, இதன்மூலம் அமெரிக்க செனட் அவை தீர்மானங்களைக் கொண்டு வரவும், அரசுத்தலைவர் Barack Obama, வருகிற ஜூனில் கையெழுத்திடவும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
உலகில் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் ஒரு கருவியாக, ஆயுதக் கட்டுப்பாட்டைக் கத்தோலிக்கத் திருஅவை நோக்குகிறது என்று John Kerryக்கு கடிதம் எழுதியுள்ள ஆயர் Pates, ஆயுதப் புழக்கங்கள் குறைக்கப்படுவதில் முயற்சிகளை எடுப்பதில் அமெரிக்க ஐக்கிய நாடு, மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா.பொது அவையில் இம்மாதம் 2ம் தேதி கொண்டுவரப்பட்ட ஐ.நா. ஆயுத வியாபாரம் குறித்த ஒப்பந்தத்தில் 154 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ஈரான், வடகொரியா, சிரியா ஆகிய மூன்று நாடுகளும் அதற்கு எதிராக ஓட்டளித்தன.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.