2013-04-12 16:20:45

மார்ச் 13, 2013. கற்றனைத்தூறும்...... ஆப்பிள்


மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, உலகின் எல்லாவிதமான குளிர்ப் பகுதிகளிலும் ஆப்பிள் வளர்க்கப்படுகிறது.
ஆசியா, ஐரோப்பா, அர்ஜென்டினா போன்ற இடங்களில் வசித்த மக்களின் உணவில், ஆப்பிள் ஒரு முக்கியமான பழமாக இருந்துள்ளது. அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகைக்குபின் ஆப்பிள் பிரபலமடைந்தது.
தற்போது உலகில் பயிரிடப்படும் ஆப்பிள்களில் சுமார் 7500 இரகங்கள் உள்ளன. தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு பலவித இரகங்கள் பயிரிடப்படுகின்றன.
தினம் ஓர் ஆப்பிள், மருத்துவரைத் தூர வைக்கும் என்ற ஆங்கிலப் பழமொழியின் கூற்றுப்படி, நெடுங்காலமாக ஆப்பிள் உடல்நலத்திற்கு மிக நல்லது என்று கருதப்பட்டது. பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் ஆப்பிள்களுக்கு உள்ளது என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள், எடைக்குறைவு, கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது.
ஆப்பிளில் காணப்படும் சில வேதிப்பொருட்கள் அல்செய்மர்ஸ் (Alzheimer's), பார்கின்சன் (Parkinson's) நோய்களிலிருந்து மூளையைப் பாதுகாக்கின்றன. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகைப் பொருட்கள் (phenolics) இயற்கையாகவே ஆக்சிஜனேற்றத் தடுப்புச்சக்தி உடையவை என்பதால், மூளையை நரம்புப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன என கார்னெல் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், இரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி இரத்தத்தைச் சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுவது நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.
ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை நீக்குவதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன. அதனால்தான், நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் செல்லும் போது, ஆப்பிளை வாங்கிச் செல்கின்றனர்.
2002ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும், சுமார் 1000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 45 லட்சம் டன் ஆப்பிள்கள் விளைவிக்கப்பட்டன. இதில் பாதியளவு சீனாவில் விளைவிக்கப்பட்டன. அர்ஜென்டினா, அமெரிக்கா ஆகிய நாடுகள் முறையே 15% ஆப்பிள்களையும், 7.5% ஆப்பிள்களையும் உற்பத்தி செய்கின்றன. துருக்கி, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, சிலி ஆகிய நாடுகளும் ஆப்பிள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன.







All the contents on this site are copyrighted ©.