2013-04-12 15:56:02

திருத்தந்தை பிரான்சிஸ் - இறைவார்த்தை ஒரு புத்தகத்தில் அடங்கிய எழுத்துக்கள் அல்ல, மாறாக, அது மனு உருவெடுத்த கிறிஸ்து


ஏப்.12,2013. இறைவார்த்தை என்பது ஒரு புத்தகத்தில் அடங்கிய எழுத்துக்கள் அல்ல, மாறாக, அது மனு உருவெடுத்த கிறிஸ்து என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
ஏப்ரல் 8 முதல் 12 முடிய வத்திக்கானில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்குப் பின் பாப்பிறை விவிலியக் கழகத்தைச் சேர்ந்தவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
இறைவார்த்தையை உயிரற்ற எழுத்து வடிவத்தில் காண்பதைவிட, உயிருள்ள கிறிஸ்துவின் வடிவத்திலும், அவர் நிறுவிய திருஅவை என்ற மக்கள் சமுதாயத்திலும் காண்பது விவிலிய ஆய்வாளர்களின் கடமை என்பதை திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.
தூய ஆவியாரின் தூண்டுதலால் எழுதப்பட்ட விவிலியத்திற்கும், அதன் அடிப்படையில் வளர்ந்துள்ள பாரம்பரியம், இறை சமுதாயம் ஆகிய அனைத்திற்கும் இறைவன் ஒருவரே ஊற்று என்பதை என்றும் மனதில் இருத்தவேண்டும் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இறைவார்த்தையின் சிறந்த ஆசிரியரான கிறிஸ்துவின் ஆசீரும், அந்த வார்த்தைக்கு தன்னை முழுவதும் அர்ப்பணித்த மரியன்னையின் பரிந்துரையும் விவிலியக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற வாழ்த்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.