2013-04-12 16:13:56

ஐ.நா. பொதுச்செயலர் - நமது கடல்களில் கலக்கப்படும் அமிலங்களின் அளவு அபாயம் தரும் அளவு உயர்ந்து வருகிறது


ஏப்.12,2013. உலகின் பெரும் கடல்களைக் காப்பதில், நாடுகள் அளவிலும், உலக அளவிலும் உடனடியாகவும், நடைமுறைக்குத் தகுந்த முறையிலும், சரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
'பெரும் கடல்கள் - நமது வருங்காலம்' என்ற தலைப்பில் பாரிஸ் மாநகரில் இவ்வியாழனன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் ஐ.நா. பொதுச் செயலரின் செய்தியை ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலாச்சார நிறுவனமான UNESCOவின் இயக்குனர் Irina Bokova வாசித்தார்.
நமது கடல்களில் கலக்கப்படும் அமிலங்களின் அளவு அபாயம் தரும் அளவு உயர்ந்து வருகிறது என்றும், இதனால் உருவாகும் வெப்ப நிலை உயர்வு இன்னும் பிற விளைவுகளை உருவாக்குகின்றன என்றும் பான் கி மூன் கவலை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஐ.நா.வின் ஆதரவுடன் அட்லாண்டிக், பசிபிக், அன்டார்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் 70,000 மைல்கள் ஆய்வு பயணம் மேற்கொண்ட Tara குழுவின் கண்டுபிடிப்புக்களைக் குறித்து தன் செய்தியில் கூறிய பான் கி மூன், இயற்கை அளித்துள்ள மாபெரும் கொடையான கடல்களைக் காப்பது அனைத்து நாடுகளின் அவசரத் தேவை என்று கூறினார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.