2013-04-11 15:52:49

கொலம்பியா நாட்டின் தலைநகரில் நடந்த அமைதி ஊர்வலத்தை ஆதரித்து ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டன


ஏப்.11,2013. ஏப்ரல் 9, இச்செவ்வாயன்று கொலம்பியா நாட்டின் தலைநகர் Bogotaவில் 2,00,000க்கும் அதிகமான மக்கள் மேற்கொண்ட அமைதி ஊர்வலத்தை ஆதரித்து அந்நாட்டு ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டன.
கொலம்பிய அரசுக்கும் FARC எனப்படும் புரட்சிக் குழுவுக்கும் இடையே பல்லாண்டுகளாய் நடைபெற்று வரும் வன்முறை மோதல்களால் பல்லாயிரம் அப்பாவி உயிர்கள் பலியாவதைத் தடுக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியை அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை பெரிதும் ஆதரித்தது.
எந்த ஒரு குறிப்பிட்டக் குழுவையும் ஆதரித்தோ, எதிர்த்தோ திருஅவை அறிக்கைகள் தர விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய அந்நாட்டு ஆயர் பேரவைச் செயலர் ஆயர் Jose Daniel Falla, இருப்பினும், அமைதியை விரும்பி மக்கள் மேற்கொண்டு வரும் எந்த ஒரு முயற்சிக்கும் திருஅவையின் முழு ஆதரவு உண்டு என்பதை வலியுறுத்தினார்.
வன்முறை, ஆள் கடத்தல் என்ற தவறான முறைகளால் நாட்டின் அமைதியையும், வளர்ச்சியையும் பெருமளவு பாதிக்கும் போராட்டக் குழுக்கள் நாட்டின் சமுதாயத்துடன் இணைய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார் ஆயர் Hector Gutierrez Pabon.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.