2013-04-11 16:09:38

ஏப்.12,2013 கற்றனைத்தூறும்..... உலகின் மிக லேசான பொருள்


கார்பன் ஏரோஜெல் (carbon aerogel) என்ற மிக லேசான பொருளை உருவாக்கி சீனாவின் Zhejiang பல்கலைக்கழக அறிவியலாளர்கள் சாதனை படைத்துள்ளனர். காற்றின் எடையைவிட ஆறில் ஒரு பங்கே எடை கொண்ட இந்த ஏரோஜெல் 0.16 மி.கி/கன செ.மீ. எடை கொண்டது. இது உலகின் மிக லேசான பொருள் என்ற பெயரைப் பெற்றுள்ளது. மிகவும் குறைவான எடை கொண்ட பொருளாக இதற்கு முன்பாக உலகில் கருதப்பட்ட கிராபைட் ஏரோஜெல் (graphite aerogel) எடையைவிட கார்பன் ஏரோஜெல் மிகவும் எடை குறைவானதாகும். கடந்த ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கிராபைட் ஏரோஜெல்லை உருவாக்கினர். இதன் எடை 0.18 மி.கி/கன செ.மீ., ஆகும். இத்தகைய ஏரோஜெல்கள், செமி சாலிட் ஜெல்லைக் (semi-solid gel) காயவைத்து உருவாக்கப்படுகின்றன. இதன் காரணமாக இவற்றின் உட்பகுதிகள் காற்றால் நிரம்பியிருப்பதால், இவை மிகவும் எடை குறைந்ததாக உள்ளன. கார்பன் ஏரோஜெல்கள் மிகவும் நீட்சித்தன்மை கொண்டவை. கார்பன் ஏரோஜெல்லை அழுத்தும்போது அதற்கு மீளும் தன்மை உண்டு. கார்பன் ஏரோஜெல் எண்ணெய் உறிஞ்சும் தன்மை மிக அதிகம் கொண்ட பொருளாகும். தற்சமயம் பயனில் இருக்கும் எண்ணெய் உறிஞ்சும் தன்மை கொண்ட பொருள்கள் தங்களது எடையில் 10 மடங்கு அளவு உறிஞ்சும் தன்மை கொண்டவை. ஆனால் கார்பன் ஏரோஜெல் தனது எடையில் 900 மடங்கு அதிக அளவு எண்ணெய் உறிஞ்சும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பண்பு காரணமாக, மாசு கட்டுப்பாட்டில் இப்பொருள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : PTI








All the contents on this site are copyrighted ©.