2013-04-10 16:51:26

திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ள பிரான்சிஸ் என்ற பெயர் பல்வேறு சக்திவாய்ந்த அடையாளங்களை நினைவுறுத்துகிறது - ஐ.நா. பொதுச் செயலர்


ஏப்.10,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிக்கோள் கொண்டவர், அமைதியானவர் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
இச்செவ்வாய் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடிய பான் கி மூன், தன் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
மில்லென்னிய முன்னேற்றங்களை அடைவதற்கான இலக்காக ஐ.நா. எண்ணியிருக்கும் காலம் வருவதற்கு சரியாக 1000 நாட்கள் மீதம் இருக்கும் இத்தருணத்தில் திருத்தந்தையைச் சந்தித்தது தனக்குக் கிடைத்த ஒரு அறிய வாய்ப்பு என்று பான் கி மூன் தெரிவித்தார்.
திருத்தந்தை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள பிரான்சிஸ் என்ற பெயர் பல்வேறு சக்திவாய்ந்த அடையாளங்களை நினைவுறுத்துகிறது என்று கூறிய ஐ.நா. பொதுச்செயலர், ஏழ்மைக்கு எதிரான போராட்டம், இயற்கையைப் பேணுதல் ஆகிய திட்டங்களில் ஐ.நா.வும் திருஅவையும் இணைந்து செயல்படும் நம்பிக்கை இந்த சந்திப்பின் வழியாக தன்னிடம் அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் ஐ.நா. அவைக்கு வந்து உரையாற்றியதுபோல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் விரைவில் ஐ.நா. பொது அவைக்கு வருவார் என்ற நம்பிக்கையையும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.