2013-04-09 15:07:33

விவிலியத்
தேடல் – 'நல்ல சமாரியர்' உவமை: பகுதி 8


RealAudioMP3 மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு சாலையில் நீங்களோ, நானோ பயணம் செல்வதாகக் கற்பனை செய்து கொள்வோம். நாம் செல்லும் அப்பகுதி திருடர்கள் நிறைந்த பகுதி என்பதையும் நாம் அறிவோம். வேறு வழியின்றி அவ்வழியே செல்ல வேண்டிய கட்டாயம் எழும் வேளையில், நம் மனதை ஆக்கிரமிக்கும் எண்ணம் என்ன? எவ்வித பாதிப்பும் இல்லாமல் அப்பகுதியை விரைவில் கடந்து செல்லவேண்டும். அவ்வளவுதான். இத்தகைய அவசரத்துடன் நாம் செல்லும் நேரத்தில், அந்தச் சாலையின் ஓரத்தில் ஒருவர் அடிபட்டுக் கிடக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் என்ன செய்வோம்? ஓடோடிச் சென்று உதவிகள் செய்வோமா? சந்தேகம்தான். ஒருவேளை, நாம் ஒரு குழுவாகச் சென்றால், உதவிகள் செய்திருப்போம். தனியாகச் செல்லும்போது, அதுவும், பல்வேறு பயங்களை மனதில் சுமந்து செல்லும்போது, உதவிகள் செய்ய தயக்கங்கள் தோன்றும்.

அடிபட்டு கிடப்பவர் திருடர்களால் தாக்கப்பட்டிருக்கலாம் என்பதே நமது முதல் எண்ணம். அவரை அடித்துப்போட்டத் திருடர்கள் இன்னும் அப்பகுதியில் எங்காவது ஒளிந்திருப்பர். அடிபட்டவருக்கு உதவிகள் செய்யப்போய் நாமும் அத்திருடர்கள் கையில் அகப்படலாம்... என்ற தயக்கம் ஒருபக்கம்.
அங்கு கிடப்பவர் உண்மையிலேயே அடிபட்டிருக்கிறாரா, அல்லது அடிபட்டவர்போல் நடிக்கிறாரா? அவரும் திருடர்களில் ஒருவராக இருந்து, அப்படி நடித்துக் கொண்டிருந்தால், அவரருகில் சென்றதும், மற்ற திருடர்கள் வந்து தாக்கலாம்... என்ற தயக்கம் மறுபக்கம்.
இவ்விதத் தயக்கங்கள் மத்தியில் நாம் செய்யக்கூடிய காரியம் என்ன? "வேண்டாம் இந்த வம்பு" என்று ஒதுங்கிக் கொள்வதுதான் அறிவுள்ள செயல். அதுவும், நாம் அவசரமான, முக்கியமான ஒரு காரியத்திற்காகச் செல்லும்போது, அடிபட்டிருக்கும் மனிதர், நமது நோக்கத்தைக் கெடுக்கவந்த ஒரு தடைதானே? நம்மால் செய்யக்கூடிய ஒரே ஒரு நல்ல காரியம், காவல்துறையைத் தொலைபேசியில் அழைத்து, இதைப்பற்றிச் சொல்லலாம். அதற்கும் நமக்குள் தயக்கம். அவர்கள் வந்தால், நாம் சாட்சியாக மாறவேண்டியிருக்கும். பின்னர், அவர்களுடன் சென்று ஒரு புகார் தாக்கல் செய்து, அதற்குப்பின், ஒருவேளை காவல் நிலையம், மருத்துவமனை, நீதிமன்றம், என்று அலைய வேண்டியிருக்கும். இதெல்லாம் நமக்குத் தேவைதானா? என்ற போராட்டம் நமக்குள் எழும்.

உங்களையும், என்னையும் ஆக்ரமிக்கும் தயக்கமும், போராட்டமும் இயேசுவின் உவமையில் கூறப்பட்டுள்ள குருவையும், லேவியரையும் ஆக்ரமித்திருக்க வேண்டும். இந்த எண்ணங்களையெல்லாம் ஒன்று திரட்டி ஒரே கேள்வியில் அடக்கிவிட்டார், அமெரிக்கக் கறுப்பின மக்களின் தலைவர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர். குருவும், லேவியரும் தங்களுக்குள் எழுப்பிக் கொண்ட கேள்வி இதுதான்: "இந்த மனிதருக்கு நான் உதவி செய்தால், எனக்கு என்ன ஆகும்?"
நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் சுயநலத்தில் தோய்க்கப்பட்ட இந்தக் கேள்வியை முற்றிலும் புரட்டிப்போட்ட கேள்வி, அப்பக்கமாய் வந்த சமாரியர் மனதில் எழுந்தது: "இந்த மனிதருக்கு நான் உதவி செய்யாவிட்டால், அவருக்கு என்ன ஆகும்?"

குரு, லேவியர் ஆகிய இருவரின் இடத்தில் என்னை இருத்திப் பார்க்கிறேன்... நான் மேற்கொண்டுள்ள பயணம், நான் சென்று அடைய வேண்டிய இடம், அங்கு எனக்குக் காத்திருக்கும் பணிகள், என் பயணத்தில் நான் சந்திக்கக்கூடிய ஆபத்துக்கள்... என்ற இந்தச் சிந்தனைக் கோர்வை 'என்னை' மட்டுமே மையப்படுத்தியது. இந்த எண்ணக் கோர்வையை விட்டு நான் வெளியேற, அடிபட்ட மனிதர் மூலம் எனக்கு ஓர் அழைப்பு வருகிறது. அந்த அழைப்பு என்னை ஒரு சில நொடிகள் பாதித்தாலும், மீண்டும் நான் விழித்துக் கொள்கிறேன். அதாவது, அடிபட்ட அந்த மனிதரை ஓர் அழைப்பாகப் பார்க்காமல், ஓர் ஆபத்தாக, ஓர் இடையூறாக எண்ணிப் பார்க்கிறேன். மீண்டும் 'நான், எனது' என்ற உலகிற்கேத் திரும்பிவிடுகிறேன். இதையொத்த எண்ணக் கோர்வையில் சிந்தித்தபடியே சென்றவர்கள் குருவும், லேவியரும்.
அவர்களைத் தொடர்ந்துவந்த சமாரியர் உள்ளத்திலும் இதையொத்த எண்ணக் கோர்வை எழுந்திருக்கும். ஆனாலும், அடிபட்டவரின் உருவில் வெளியிலிருந்து வந்த அழைப்பு, தன்னல உலகிலிருந்து அந்தச் சமாரியரை வெளியேக் கொணர்ந்தது. நமது உவமையின் நாயகனைப் பற்றி இயேசு கூறும் வார்த்தைகள் லூக்கா 10:33-35 இறைச் சொற்றொடர்களில் உள்ளன. இந்த மூன்று இறைச் சொற்றொடர்களில் சமாரியர் மேற்கொண்ட செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. நமது சிந்தனையைத் தூண்டும் அச்செயல்கள் இதோ:

சமாரியர் ஆற்றிய இச்செயல்கள் அனைத்தையும் பல்வேறு கோணங்களில் நாம் சிந்திக்கலாம். குரு, லேவியர், சமாரியர் என்ற இந்த வரிசையில் இயேசு இந்த மூவரையும் அறிமுகப்படுத்தியதையும், அடிபட்டவருக்குச் சமாரியர் மேற்கொண்ட முதல் உதவியையும் ஒரு குறிப்பிட்ட இறையியல் கோணத்திலிருந்து சிந்திக்க விழைகிறேன்.

குரு, லேவியர் என்ற இருவரையும் இயேசு தன் உவமையில் குறிப்பிட்டதும், சூழ இருந்த மக்கள் மனதில் எருசலேம் கோவில் பற்றிய எண்ணங்கள் இயல்பாகத் தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் இருவரும் கோவில் பணிக்கென அர்ப்பணிக்கப்பட்டவர்கள். எருசலேம் கோவில் பற்றிய எண்ணங்களை அம்மக்கள் மனதில் விதைத்த இயேசு, அதே மூச்சில் தொடர்ந்து 'அவ்வழியே ஒரு சமாரியர் வந்தார்' என்று சொன்னதும், சூழ இருந்தவர்களுக்குக் கோபம் எழுந்திருக்க வேண்டும். காரணம் என்ன? எருசலேம் கோவில் என்ற எண்ணத்துடன் சிறிதும் பொருந்தாத சமாரியரை அந்நேரத்தில் அவர்களால் சிந்திக்க முடியவில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன், (அதாவது, கி.பி. 9ம் ஆண்டில்) பாஸ்கா விழாவின்போது எருசலேம் கோவிலைக் களங்கப்படுத்தியவர்கள் சமாரியர்கள் என்பதை அவர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிடவில்லை. எனவே, இயேசு சமாரியரை அறிமுகப்படுத்தியதும், மக்கள் மனதில் கோபம் அதிகம் எழுந்திருக்கும்.

குரு, லேவியர், சமாரியர், எருசலேம் கோவில், அடிபட்டவர் என்ற ஐந்து அம்சங்களையும் இணைத்துச் சிந்திப்பது அழகான எண்ணங்களை உருவாக்குகின்றன. எருசலேம் கோவிலை முதன்மைப்படுத்தி, கோவிலைக் காரணம் காட்டி, குருவும், லேவியரும் அடிபட்டிருந்தவரைக் கடந்து சென்றனர். இந்தச் சூழலில் அங்கு வந்து சேருகிறார் சமாரியர். எருசலேம் கோவிலையே இழிவுபடுத்திய சமாரியர் குலத்தில் பிறந்த ஒருவர், குருவும் லேவியரும் செய்ய மறந்ததை, செய்ய மறுத்ததைச் செய்தார் என்று இயேசு கூறியது மக்களிடம் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கும்.
சமாரியர் செய்ததாய் இயேசு கூறும் முதல் வார்த்தைகள் ஆழமான இறையியல் எண்ணங்களை மனதில் விதைக்கின்றன. "ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டினார்." (லூக்கா 10: 33-34)

எந்த மதத்திலும் கோவில் வழிபாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது எண்ணெய். இஸ்ரயேல் மக்கள் வாழ்விலும், வழிபாட்டிலும் ஒலிவ எண்ணெயும் திராட்சை இரசமும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. ஆலயப் பீடத்தின்மீதும், குருக்கள் மீதும் தூய திருப்பொழிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒலிவ எண்ணெயை எவ்விதம் தயாரிப்பது, அதைத் திருப்பொழிவுக்கு எவ்விதம் பயன்படுத்துவது என்பதை விடுதலைப் பயணநூல் 30ம் பிரிவில், 22 முதல் 33 முடிய உள்ள இறைச் சொற்றொடர்களில் நாம் வாசிக்கிறோம். இதோ அப்பகுதியிலிருந்து ஒரு சில இறைச் சொற்றொடர்கள்:

விடுதலைப்பயண நூல் 30 24-32
மீண்டும் ஆண்டவர் மோசேயிடம், தலைசிறந்த நறுமணப் பொருள்களை எடுத்து, ஒரு கலயம் அளவு ஒலிவ எண்ணெயும் சேர்த்து, திறமை வாய்ந்த பரிமளத் தயாரிப்பாளன் செய்வதுபோல், கூட்டுத் தைலமாக ஒரு தூய திருப்பொழிவு எண்ணெய் தயாரிப்பாய். இது தூய திருப்பொழிவு எண்ணெயாக இருக்கும், இதைக்கொண்டு சந்திப்புக் கூடாரம். உடன்படிக்கைப் பேழை, மேசை, அதன் அனைத்துத் துணைக் கலன்கள், விளக்குத் தண்டு, அதன் துணைக் கலன்கள், தூபப்பீடம், எரிபலிபீடம், அனைத்துத் துணைக்கலன்கள், நீர்த்தொட்டி, அதன் ஆதாரம் ஆகியவற்றைத் திருப்பொழிவு செய்வாய். நீ அவற்றை அர்ப்பணம் செய்வதால் அவை புனிதமானவையாகும். மேலும் அவற்றைத் தொடுபவை அனைத்தும் புனிதம் பெறும். ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் நீ அருள்பொழிவு செய்து, அவர்களை எனக்குக் குருத்துவப்பணி புரியுமாறு திருநிலைப்படுத்துவாய். மேலும் நீ இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்க வேண்டியது: இது என்னுடைய தூய திருப்பொழிவு எண்ணெயாக உங்கள் தலைமுறைதோறும் இருக்க வேண்டும். இது புனிதமானது. உங்களுக்கும் இது புனிதமானதாக இருக்கட்டும்என்றார்.

குருவும், லேவியரும் கோவிலில் உள்ள பல பொருள்களுக்கு எண்ணெய் வார்த்து, அவற்றைப் புனிதமாக்கும் பணியில் பழக்கப்பட்டவர்கள். அப்பணிக்கு, தங்கள் தீட்டுப்படாத உடல் தேவை என்பதை மட்டும் கருத்தில் கொண்டு அவர்கள் கோவிலுக்குச் சென்றனர். போகும் வழியில், அடிபட்டுக் கிடந்த ஓர் உயிருள்ள ஆலயத்தைத் தொடுவதற்கு அஞ்சி, விலகிச் சென்றனர். அவர்கள் நிறைவேற்ற மறந்த அல்லது மறுத்த ஒரு கடமையையே சமாரியர் நிறைவேற்ற முன்வந்தார். அடிபட்டுக் கிடந்த அந்த உயிருள்ள ஆலயத்தின் காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டினார்.
எருசலேம் ஆலயத்தை இழிவுபடுத்தியதால் இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இழிவாகக் கருதப்பட்ட சமாரியர் குலத்தில் பிறந்த ஒருவர், ஆடைகள் களையப்பட்டு, தன் மானமும், சுய அடையாளமும் இழந்து, அடிபட்டுக் கிடக்கும் உயிருள்ள ஓர் ஆலயத்தின்மீது எண்ணெய் ஊற்றி அதைப் புனிதப்படுத்துகிறார். அடிபட்ட இந்த ஆலயத்திற்கு சமாரியர் செய்த மற்ற அருள் பணிகளைத் தொடர்ந்து சிந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.