2013-04-09 15:07:27

கற்றனைத் தூறும் மனித உடலின் எலும்புகள்


மனித உடலை ஒரு கட்டிடமாக உருவகித்தால், அக்கட்டிடத்தின் அடித்தளம் நமது எலும்புகள் என்று எவ்விதத் தயக்கமுமின்றி சொல்லலாம். ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போது ஏறத்தாழ 350 எலும்புகளுடன் பிறக்கின்றது. ஆனால், முழு வளர்ச்சியடைந்த மனித உடலில் 206 எலும்புகளே உள்ளன. 100க்கும் அதிகமான எலும்புகள் ஒன்றோடொன்று இணைவதால் வரும் எண்ணிக்கைக் குறைவு இது.
இந்த 206 எலும்புகளில் 106 எலும்புகள் கைகளிலும், கால்களிலும் உள்ளன. மண்டை ஓடு பகுதியில் 28 எலும்புகளும், தண்டுவடத்தில் 26 (33) எலும்புகளும், மார்புக் கூட்டில் 24 எலும்புகளும் உள்ளன. மனித முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 14.
மனித உடலில் Femur எனப்படும் தொடை எலும்புதான் நீளமானது. இது மனித உடலின் மொத்த நீளத்தில் நான்கில் ஒரு பகுதி. காதில் உள்ள Stapes எனப்படும் எலும்பே மனித உடலில் மிகச் சிறிய எலும்பு. குழந்தை பிறக்கும்போதே முழு வளர்ச்சியடைந்த நிலையில் காணப்படும் எலும்பு இந்த எலும்பு மட்டுமே. உடலின் மொத்த எடையில் எலும்புகளின் எடை 14 முதல் 20 விழுக்காடாகும். பகுதி, பகுதியாகப் புதுப்பிக்கப்படும் நமது எலும்புக்கூடு, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை முற்றிலும் புதுப்பிக்கப்படுகிறது. நமது உடலைத் தாங்குதல், உடலுக்கு உயிரளிக்கும் உறுப்புக்களைப் பாதுகாத்தல், மற்றும் இரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களை உருவாக்குதல் ஆகியவை எலும்புகளின் முக்கியப் பணிகள்.

ஆதாரம் - http://ezinearticles.com; http://www.ten-facts.com








All the contents on this site are copyrighted ©.