2013-04-08 16:38:30

திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை


ஏப்.08,2013. கிறிஸ்தவர்களாக இருப்பதற்கோ கிறிஸ்தவ வாழ்வை மேற்கொள்வதற்கோ நாம் ஒருநாளும் அஞ்சக்கூடாது என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உயிர்ப்புக்கால இரண்டாம் ஞாயிறன்று தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை உரோம் நகர் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய திருத்தந்தை, இறை இரக்கத்தின் அனுபவத்திலிருந்து வரும் ஆழமான, உண்மையான அமைதியை இயேசு கொணர்ந்தார் எனவும் கூறினார்.
'உங்களுக்கு அமைதி உரித்தாகுக' என உயிர்த்த இயேசு தன் சீடர்களுக்கு அறிவித்தது வெறும் வாழ்த்து மட்டுமல்ல அது ஒரு கொடையாகும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு வழங்கிய அமைதி, தீமையின் மீது கடவுள் கொண்ட வெற்றியின் கனி மற்றும் மன்னிப்பின் கனி என்று கூறியத் திருத்தந்தை, இதுவே உண்மை அமைதி எனவும் எடுத்துரைத்தார்.
தான் உயிர்த்தபின் இரண்டாம் முறை இயேசு சீடர்களுக்குத் தோன்றியபோது, புனித தோமாவை நோக்கி, 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' எனக்கூறிய வார்த்தைகளையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இதை நாம் விசுவாசத்தின் பேறு எனக் கூறலாம் எனவும் எடுத்துரைத்தார்.
திருத்தாதர்களைப்போல் நாமும் துணிவுடன் கிறிஸ்துவின் சாட்சிகளாக அவரின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் - வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.