2013-04-08 16:36:31

இறைஇரக்க ஞாயிறன்று உரோமை ஆயராக பொறுப்பேற்றார் திருத்தந்தை


ஏப்.08,2013. இறைஇரக்கத்தின் ஞாயிறான இஞ்ஞாயிறன்று உரோமை ஆயர் என்ற பொறுப்பை ஏற்கும் வகையில் உரோம் நகர் புனித ஜான் லாத்தரன் பேராலயப் பொறுப்பை ஏற்கும் திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனுக்கு நாம் வெறும் எண்ணிக்கையல்ல, மாறாக அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றுரைத்தார்.
உயிர்ப்புக்குப் பின்வரும் ஞாயிறு இறைஇரக்கத்தின் ஞாயிறாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ற விதியை முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் உருவாக்கியது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், இந்த இறை இரக்க ஞாயிறின் முந்தைய நாள்தான் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் உயிரிழந்தார் என்பதையும் நினைவுகூர்ந்தார்.
இறைவனின் இரக்கம் குறித்தே தன் மறையுரையில் மீண்டும் மீண்டும் எடுத்துரைத்த திருத்தந்தை, இறைவனின் அன்பு என்றும் மாறாதது அதுவே நம்மை கைப்பிடித்து அழைத்துச்செல்கின்றது எனவும் எடுத்துரைத்தார்.
பொறுமையுள்ள இறைவன் நம்மை மன்னித்து நம்மில் நம்பிக்கையை விதைக்கிறார் எனவும் எடுத்துரைத்தத் திருத்தந்தை. இதற்கு உதாரணமாக 'காணாமற்போன மகன்' உவமையைச் சுட்டிக்காட்டி, கடவுளின் பொறுமை என்பது நாம் அவரிடம் திரும்பிவருவதற்கான மனதைரியத்தை நம்மிடம் எதிர்பார்க்கிறது என்றார்.
நாம் எண்ணற்ற பாவங்கள் செய்துவிட்டோம் என மனம் தளரவேண்டாம், ஏனெனில் நம்மை மன்னித்து ஏற்க தந்தையாம் இறைவன் எப்போதும் காத்திருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் திரும்பிவருவோம் எனவும் தன் மறையுரையில் நம்பிக்கையின் வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் - வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.