2013-04-06 15:50:34

மாரனைட் முதுபெரும் தலைவர்: சிரியாவில் இடம்பெறும் சண்டைகள் சமய மோதல்களுக்கு இட்டுச்செல்லக்கூடும்


ஏப்.06,2013. சனநாயகத்துக்கு ஆதரவாக எழுந்த அரபு வசந்தம் எனப்பட்ட எழுச்சியின்மீது வகுப்புவாதச் சண்டைகளும், தெளிவற்ற சூழல்களும் ஏற்படுத்திவரும் பாதிப்பு, சிரியாவிலும், லெபனனின் சில பகுதிகளிலும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது என்று லெபனன் மாரனைட் முதுபெரும் தலைவர் கர்தினால் Bechara Raï எச்சரித்தார்.
வருகிற திங்களன்று பிரான்சுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் கர்தினால் Raï நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நாடுகள் மற்றும் நிறுவனங்களின் நற்பணிகள்மீது இருள்நிறைந்த சக்திகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என்று கூறினார்.
இதுவரை நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவரும் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மத்தியில் இச்சக்திகள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன எனவும் கர்தினால் ராய் குறை கூறினார்.
கடந்த 18 மாதங்களாக சண்டை இடம்பெற்றுவரும் சிரியாவில், அதன் புரட்சிக்குழுக்களுக்கு வெளிநாட்டுச் சக்திகள் ஆயுதங்களை வழங்கி வருவது குறித்தும் கர்தினால் Raï குறிப்பிட்டார்.

ஆதாரம்: AsiaNews







All the contents on this site are copyrighted ©.