2013-04-06 15:46:50

திருத்தந்தை பிரான்சிஸ் : உரோம் நகரின் ஆயராகப் பொறுப்பேற்கும் திருப்பலி


ஏப்.06,2013. உரோம் நகரின் ஆயராகிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற பொறுப்பையும், அம்மறைமாவட்டப் பேராலயமான புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவின் பணிகளையும் ஏற்கும்வகையில், இஞ்ஞாயிறு மாலை 5.30 மணிக்கு அப்பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்துவார்.
ஏப்ரல் 7, இறைஇரக்க ஞாயிறான இஞ்ஞாயிறு மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தும் திருப்பலியில், உரோம் மறைமாவட்ட திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் Agostino Vallini, உரோம் மேயர் Gianni Alemanno, உரோம் மாநகராட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்வார்கள்.
மேலும், திருத்தந்தைக்குப் பணிந்து நடப்பதற்கு வாக்குறுதி வழங்கும் நிகழ்வும் இத்திருப்பலியில் இடம்பெறும். கர்தினால் Agostino Vallini, உதவி ஆயர், பங்குக்குரு, உதவிப் பங்குக்குரு, ஓர் அருள்சகோதரி, ஒரு குடும்பம், இளையோர் என, பல்வேறு நிலைகளைச் சார்ந்தோர் திருத்தந்தைக்கு வாக்குறுதி அளிப்பர்.
மேலும், உரோம் மறைமாவட்ட அலுவலகங்கள் அமைந்திருக்கும் கட்டிடத்தின் முன்புறமுள்ள வளாகத்தின் பெயரை மாற்றும் நிகழ்ச்சியிலும், இத்திருப்பலிக்கு முன்னர் கலந்து கொள்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மாலை 5 மணியளவில் இடம்பெறும் இந்நிகழ்ச்சியில், “San Giovanni in Laterano” என்ற அவ்வளாகத்தின் பெயரை, “Largo Beato Giovanni Paolo II” அதாவது முத்திப்பேறுபெற்ற இரண்டாம் ஜான் பால் வளாகம் என மாற்றும் பெயர் பொறிக்கப்பட்ட கற்பலகையைத் திறந்துவைப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற பதவி தவிர, உரோமன் மாநிலப் பேராயர், இத்தாலித் திருஅவையின் தலைவர், மேற்கத்திய திருஅவையின் முதுபெரும் தலைவர் என்ற பதவிகளும் திருத்தந்தையர்க்கு உள்ளன.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.