திருத்தந்தை பிரான்சிஸ் : பாலியல் முறைகேடு தொடர்பாக முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
அவர்கள் எடுத்த தீர்மானங்களைத் தொடர்ந்து செயல்படுத்த பரிந்துரை
ஏப்.05,2013. திருஅவையில் இடம்பெற்ற சிறார் பாலியல் முறைகேடு தொடர்பாக முன்னாள் திருத்தந்தை
16ம் பெனடிக்ட் அவர்கள் எடுத்த தீர்மானங்களைத் தொடர்ந்து செயல்படுத்த திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப்
பேராயத்துக்குப் பரிந்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். விசுவாசக்கோட்பாட்டுப்
பேராயத் தலைவர் பேராயர் Gerhard Ludwig Muellerஐ இவ்வெள்ளியன்று சந்தித்து, அப்பேராயம்
தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்து பேசிய திருத்தந்தை பிரான்சிஸ், சிறாருக்குப்
பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், கடந்த காலத்தில் பாலியல் முறைகேடுகளால்
பாதிக்கப்பட்டுள்ள சிறாருக்கு உதவவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் எடுத்த தீர்மானங்களைத்
தொடர்ந்து செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். பாலியல் முறைகேடு குறித்த குற்றம்புரிந்தவர்களுக்கு
எதிரான நடவடிக்கைகளை ஆயர் பேரவைகள் எடுப்பது திருஅவையின் நம்பகத்தன்மைக்கும், திருஅவையின்
சாட்சியத்துக்கும் முக்கியமானது என்பதையும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார். திருஅவையின்
சில குருக்களால் பாலியல் முறைகேடுகளுக்குப் பலியானவர்கள் மற்றும் அவற்றால் துன்புறுவோர்
தனது செபத்திலும் எண்ணத்திலும் சிறப்பாக இருக்கின்றார்கள் என்பதையும் உறுதிப்படுத்தினார்
திருத்தந்தை பிரான்சிஸ்.