2013-04-05 15:58:27

50வது அனைத்துலக இறையழைத்தல் தினத்துக்கு அமெரிக்க ஆயர்கள் தயாரிப்பு


ஏப்.05,2013. திருஅவையின் அடிப்படை மறைப்பணியின் ஓர் அங்கமாக அமைந்துள்ள இறையழைத்தல்கள், நற்செய்தியைப் போதிக்கவும், இன்றைய உலகில் அன்புக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பவும் உதவ வேண்டுமென்று அமெரிக்கப் பேராயர் ஒருவர் கூறினார்.
இம்மாதம் 21ம் தேதியன்று சிறப்பிக்கப்படும் 50வது அனைத்துலக இறையழைத்தல் தினத்துக்கென அமெரிக்க ஆயர்களின் தயாரிப்பு குறித்து இவ்வியாழனன்று நிருபர் கூட்டத்தில் பேசிய, அமெரிக்க ஆயர் பேரவையின் குருக்கள் மற்றும் துறவறத்தார் பணிக்குழுத் தலைவர் St. Louis பேராயர் Robert J. Carlson இவ்வாறு கூறினார்.
குருத்துவ மற்றும் துறவற அழைத்தல்கள் இவ்வுலகுக்கு வழங்கும் நம்பிக்கை குறித்து வலியுறுத்த விரும்புவதாகத் தெரிவித்த பேராயர் Carlson, இவ்வுலகில் இறையாட்சியைக் கட்டியெழுப்புவதற்கு நல்ல புனிதக் குருக்களும், அர்ப்பணிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் தேவைப்படுகின்றனர் என்று கூறினார்.
“இறையழைத்தல்கள் : விசுவாசத்தில் ஊன்றப்பட்ட நம்பிக்கையின் அடையாளம்” என்ற தலைப்பில், நல்லாயன் ஞாயிறான இம்மாதம் 21ம் தேதியன்று 50வது அனைத்துலக இறையழைத்தல் தினம் சிறப்பிக்கப்படவிருக்கின்றது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.