2013-04-03 16:06:14

முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான்பால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள பீடத்திற்கு முன்பாக திருத்தந்தை பிரான்சிஸ்


ஏப்.03,2013. ஏப்ரல் 2ம் தேதி மாலை 7 மணியளவில், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயம் திருப்பயணிகளுக்கு மூடப்பட்டபின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைந்தத் திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான்பால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள பீடத்திற்கு முன்பாக செபத்தில் ஈடுபட்டார்.
2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இறையடி சேர்ந்த முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் மறைந்ததன் எட்டாம் ஆண்டு நினைவையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் மேல்தளத்தில் அமைந்துள்ள புனித செபஸ்டியன் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது கல்லறைக்கு முன் செபத்தில் ஈடுபட்டார்.
இதன்பின்னர், பேராலயத்தின் இன்னும் இரு இடங்களில், திருத்தந்தையர்களான புனித பத்தாம் பயஸ் அவர்களும், முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்களும் வைக்கப்பட்டுள்ள கல்லறைக்களுக்கு முன்பாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபத்தில் ஈடுபட்டார்.
புனித பேதுரு பசிலிக்காவின் அடித்தளத்தில் ஈரடுக்குகளுக்குக் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் புனித பேதுருவின் கல்லறையையும், அதற்கு அடுத்தபடி மேல்தளத்தில் அமைந்துள்ள பல திருத்தந்தையரின் கல்லறைகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று மாலையில் தரிசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் – வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.