2013-04-03 16:03:59

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஏப்ரல் 03, 2013. திருத்தந்தையாகப் பதவியேற்றபின் தன் முதல் புதன் மறைபோதகத்தில் புனித வாரத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் கத்தோலிக்கர்களின் விசுவாச அறிக்கை குறித்து தன் மறைபோதகத்தை வழங்கினார். இப்புதன் மறைபோதகத்தில் கலந்து கொள்ள இத்தாலியின் மிலான் நகரிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளையோர் வந்து கூடியிருந்ததால் தூய பேதுரு வளாகமே இளமை ததும்பி காணப்பட்டது எனக் கூறலாம். தற்போது திருஅவையில் சிறப்பிக்கப்படும் 'விசுவாச ஆண்டு' தொடர்பாக தன் புதன் மறைபோதகங்களில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், நம் விசுவாச அறிக்கையை வரிவரியாக விளக்கி வந்ததன் தொடர்ச்சியாக இப்புதன் உரை இருந்தது.
உயிர்ப்பு ஞாயிறைத்தொடர்ந்து வந்துள்ள இந்த புதனன்று, “வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்" என்ற விசுவாச அறிக்கையின் வரிகளை வைத்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இயேசுவின் உயிர்ப்பின் மீதான நம் நம்பிக்கையே நம் விசுவாசத்தின் இதயமாக உள்ளது. இதுவே இறைவனின் வாக்குறுதிகளில் நம் நம்பிக்கையின், மற்றும் பாவம் மற்றும் மரணத்தின் மீது இயேசு கண்ட வெற்றியின் மீதான நம் நம்பிக்கையின் அடித்தளமாக உள்ளது. உயிர்ப்பின் முதல் சாட்சிகளாக பெண்களே இருந்தனர். உயிர்ப்புச் செய்தியை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட அவர்கள், அந்த நற்செய்தியை திருத்தூதர்களுக்கும் எடுத்துச்சென்றனர். உயிர்ப்பு குறித்த நம் விசுவாசத்திலிருந்து பிறந்த மகிழ்வை நாம் பிறருடன் பகிரவேண்டிய தேவை உள்ளது. இது நம்மை சார்ந்தது. திருஅவை வரலாற்றில் கிறிஸ்துவின் மீதான விசுவாசத்திற்கான கதவுகளைத் திறந்துவிடும் சிறப்புப் பங்கு பெண்களுக்கிருந்தது. ஏனெனில் விசுவாசமே எப்போதும் அன்பிற்கான பதிலுரை. இயேசுவின் உயிர்ப்பின் ஒளிக்கதிரை நம்முடைய இவ்வுலகிற்குக் கொண்டுவர உதவும், கருணையின், மன்னிப்பின், நன்மைத்தனத்தின்,பிறரன்பின் செயற்பாடுகள், மற்றும் விவிலியம், திருநற்கருணை, ஏனைய திருவருட்சாதனங்கள் என உயிர்த்த இயேசுவின் இருப்பு குறித்த பல அடையாளங்களை நாம் விசுவாசக் கண் கொண்டு சந்திக்கிறோம். தீமை, பாவம் மற்றும் மரணம் மீது வாழ்வும் நம்பிக்கையும் கண்ட வெற்றியின் வாழும் அடையாளமாக இவ்வுலகில் செயல்பட உயிர்த்த கிறிஸ்துவிலான நம் விசுவாசம் நமக்கு உதவுவதாக.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இப்புதனன்று பெரிய அளவில் கூடியிருந்த இளையோருக்கு, குறிப்பாக மிலானிலிருந்து வந்திருந்த இளையோர் சமுதாயத்திற்குச் சிறப்பு செய்தி ஒன்றும் வழங்கினார்.
உங்களைப் பார்த்து கூறுகிறேன்: 'இயேசு உயிரோடு வாழ்கிறார். நம் வாழ்வில் நம்மோடு இணைந்து நடந்து வருகிறார்' என்ற உறுதிப்பாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்லுங்கள். இதுவே உங்கள் மறைப்பணியாகட்டும். இந்த நம்பிக்கையை எடுத்துச்செல்லுங்கள். இந்த நம்பிக்கையோடு இணைந்திருங்கள். போராலும், தீமைகளாலும், பாவத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வுலகிற்கு நம்பிக்கையை எடுத்துச்செல்லுங்கள். இளையோரே, முன்னோக்கிச் செல்லுங்கள். இவ்வாறு இளையோருக்கான செய்தியை வழங்கிய பின்னர், தன் புதன் மறைபோதகத்தின் இறுதியில், அனைவருக்கும் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை.
அதன் பின்னர் ஏறத்தாழ அரைமணிநேரத்திற்கு மேல் அங்கு குழுமியிருந்த மக்களிடையே நடந்து வந்து பலரை, குறிப்பாக குழந்தைகள், புதுமண தம்பதிகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளைத் தொட்டு ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.








All the contents on this site are copyrighted ©.