2013-04-03 15:48:18

ஏப்ரல் 04, 2013. . கற்றனைத்தூறும்...... சோப்பு (சவர்க்காரம்)


மெசபடோமியப் பகுதியின் புகழ் பெற்ற பேரரசுகளில் ஒன்றான பாபிலோனிய பேரரசின் கடைசி அரசரான நபோனிதஸ் (கி.மு.556 – கி.மு.539) ஆட்சிக்காலத்தில் அரண்மனையில் பணிப்பெண்களாக வேலை பார்த்து வந்த பெண்கள், எரிந்த மரங்களின் சாம்பலைப் பயன்படுத்தி சலவைக்கற்களின் மீது படிந்திருந்த கறைகளைச் சுத்தம் செய்தனர். இதனை ஒரு நாள் தற்செயலாகப் பார்வையிட்ட நபோனிதஸ், இது குறித்து தன்னுடைய அரண்மனை வேதியியலாளர்களிடம் விவாதம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, சாம்பலுடன், விலங்குகளின் கொழுப்புகளில் இருந்து பெறப்பட்ட கொழுப்பு எண்ணெய், மெழுகு, மற்றும் உப்பு இவற்றுடன் தண்ணீரையும் சேர்த்து ஒரு காரகரைசல் தயாரிக்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட இந்தக் காரகரைசலைச் சூடுபடுத்தி, கொதிக்க வைத்து வற்றச் செய்தனர். காரகரைசல் வற்றி தின்ம நிலையை அடைந்ததும் அவை சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டது. இதுதான் மனிதன் முதலில் தயாரித்த சவர்க்காரம் (soap) ஆகும். தயாரித்த சோப்புகளை முதலில் தரையைச் சுத்தம் செய்யவும், பின்பு ஆடைகளைச் சுத்தம் செய்யவும் இறுதியாக குளிக்கவும் பயன்படுத்தினார்கள். பின்னர் இத்தொழில்நுட்பம் சில வணிகர்களின் வாயிலாக சிரியா, ரோம், எகிப்து மற்றும் மொரோக்கோ வரை சென்றடைந்தது.
Soap என்ற சொல் Sapo என்ற இலத்தீன் சொல்லில் இருந்து பிறந்ததாகும். பதினாறாம் நூற்றாண்டு வரை மனிதர்கள், துணிகளைத் துவைப்பதற்கும், குளிப்பதற்கும் ஒரே சோப்புகளைத்தான் பயன்படுத்தினார்கள். மனிதர்கள் குளிப்பதற்காக தனியாக மென்மையான சோப்புகள் தயாரிக்கும் பணி துவங்கிய போது, இதில் விலங்குகளின் கொழுப்புக்குப் பதிலாக ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் 1789-ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஆண்ட்ரூவ் பியர்ஸ் (Andrew Pears) என்பவர் முதன் முதலில் மிக எளிமையான தொழில்நுட்பத்தில் நறுமணத்துடன் கூடிய மென்சோப்புகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டறிந்தார். இந்த தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி இவரது மருமகனான தாமஸ் ஜே. பார்ட் (Thomas J. Barratt) என்பவர் இலண்டன் மாநகரில் உள்ள Isleworth என்ற இடத்தில் 1862ம் ஆண்டு சோப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் துவக்கினார். தயாரிக்கப்பட்ட சோப்பிற்கும் அந்த சோப்பு நிறுவனத்திற்கும் தனது மாமனாரின் நினைவாக பியர்ஸ் என்று பெயரிட்டார். இதுதான் உலகில் வணிக நோக்கில் துவங்கப்பட்ட முதல் சோப்பு நிறுவனமாகும்.








All the contents on this site are copyrighted ©.