2013-04-03 16:12:33

ஆயுத வர்த்தகம் தொடர்பான உலகளாவிய ஒப்பந்தம் உலக மக்களுக்குக் கிடைத்த வெற்றி - ஐ.நா.பொதுச் செயலர்


ஏப்.03,2013. பல ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கும், நாம் கண்ட கனவுகளுக்கும் ஒரு சிகரமாக, உலக மக்களுக்குக் கிடைத்த வெற்றி இது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஆயுத வர்த்தகம் தொடர்பான ஓர் உலகளாவிய ஒப்பந்தம் உருவாக இச்செவ்வாயன்று பெரும்பான்மை உலக நாடுகள் இசைவு தந்ததையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
193 நாடுகள் கலந்துகொள்ளும் ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தில், அனைத்து நாடுகளின் ஒப்புதலையும் பெற்று ஒரு சட்டமாக உருவாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி, கடந்த வியாழனன்று அனைத்து வாக்குகளையும் பெற முடியாமல் தோல்வியுற்றது.
இந்த ஒப்பந்தம், ஐ.நா.வின் பொது அவையில் இச்செவ்வாயன்று 154 நாடுகளின் ஒப்புதலுடன் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஈரான், சிரியா, வடகொரியா ஆகிய மூன்று நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்த வேளை, 23 நாடுகள் ஓட்டளிக்காமல் இருந்துவிட்டன.
சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்களை வாங்கும் வன்முறை கும்பல்களைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த ஒப்பந்தத்தை, அமெரிக்காவின் துப்பாக்கிக் கழகம் பல வழிகளிலும் தோல்வியுறச் செய்வதற்கு முயன்றது என்பதும் இந்த முயற்சிகளை மீறி, அமெரிக்க ஐக்கிய நாடு இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து நாடுகளின் கையொப்பம் பெறுவதற்கு ஜூன் மாதம் 3ம் தேதி இந்த ஒப்பந்தம் வெளியிடப்படும் என்றும், 50 நாடுகளின் கையொப்பம் பெற்ற நாளிலிருந்து 90 நாட்களில் இந்த ஒப்பந்தம் நடைமுறை சட்டமாகும் என்றும் Reuters செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் – UN / Reuters








All the contents on this site are copyrighted ©.