2013-04-02 15:23:34

தூய பேதுரு அடித்தளக்கல்லறைகளுக்குத் திருத்தந்தையின் பயணம்


ஏப்.02,2013. தூய பேதுரு கோவிலின் மையப்பீடத்திற்கு இரண்டு தளங்களுக்கு நேர்கீழே இருக்கும் தூய பேதுரு கல்லறையை இத்திங்கள் மாலை சென்று தரிசித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
பசிலிக்காவின் அடித்தளத்திலிருக்கும் ஆதிகாலக் கிறிஸ்தவர்களின் கல்லறைப் பகுதிகளுக்குச் சென்று தரிசித்த முதல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே என்று குறிப்பிட்ட திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி, அக்கல்லறையில் அவர் அமைதியாக சில மணித்துளைகளை தியானத்தில் செலவிட்டார் எனவும் கூறினார்.
புனித பேதுருவின் கல்லறைக்கும் பசிலிக்காவுக்கும் இடையிலிருக்கும் தளத்திற்கு வந்த திருத்தந்தை, அங்கு, திருத்தந்தையர்கள் 15ம் பெனடிக்ட், 11ம் பயஸ், 12ம் பயஸ், ஆறாம் பவுல், முதலாம் ஜான் பால் ஆகியோரின் கல்லறைகளையும் தரிசித்து அவர்களின் கல்லறைகள் முன் செபிக்கவும் செய்தார்.
தூய பேதுருவின் கல்லறை மீதே கி.பி. 324ம் ஆண்டு பேரரசர் கான்ஸ்டன்டைன் தூய பேதுரு பசிக்கா பேராலயத்தைக் கட்டியெழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் – வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.