2013-04-01 12:11:00

வாரம் ஓர் அலசல் – விளைவிப்பதும் அறுப்பதும் அவரவர் கையிலே


ஏப்.01,2013 RealAudioMP3 . ஒருமுறை புத்தமத குரு ஒருவர் தம் சீடர்களிடம் வெட்டப்பட்ட தேக்கு மரத்தைக் காட்டி இதனால் என்ன பயன் என்று கேட்டார். அதற்கு ஒவ்வொரு சீடரும் ஒவ்வொரு பதிலைத் தந்தனர். ஒரு சீடர் மட்டும் பதில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதனால் குரு அச்சீடரிடம் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். அப்போது அந்தச் சீடர், வெட்டப்பட்ட அம்மரம் திறமையான ஆசாரியின் கையில் கிடைத்தால், அவர் அதைச் செதுக்கி, பலவண்ணம் பூசி விலையுயர்ந்த பொருளாக ஆக்குவார். அம்மரம் விறகுவெட்டியிடம் கிடைத்தால் அவர் அதை வெட்டித் துண்டாக்கி எரித்துச் சாம்பலாக்கி விடுவார். ஆக, விளைவிப்பதும் அறுப்பதும் அவரவர் கையிலே, பயனாவதும் வீணாவதும் அவரவர் பார்வையிலே என்று பதில் சொன்னார் சீடர். அந்தச் சீடரின் பதிலைக் கேட்டுப் புன்னகைத்தார் குரு.
மலர்வதி. இவர் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிக்கோடு கிராமத்தில் வறிய குடும்பத்தில் பிறந்தவர். ஒன்பதாம் வகுப்புவரை மட்டுமே படித்திருக்கும் மலர்வதி, இன்று, சாகித்ய அகாடமி விருதுக்குச் சொந்தக்காரர். இவர் எழுதிய “ஒரு தூப்புக்காரியின் கதை” என்ற நாவல், 2012ம் ஆண்டின் இளம் எழுத்தாளருக்கான 'சாகித்ய அகாடமி விருது' பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் பல தமிழ் பத்திரிகைகள், இவரை இளவயது இலக்கியவாதி, இளம் எழுத்தாளர் என்றெல்லாம் புகழ்ந்து எழுதியிருந்தன. மலர்வதியின் இந்நூலுக்கு கருவாக இருந்த சூழல், இன்று அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வைத் தூண்டியுள்ளது எனச் சொல்லலாம். ஒன்பதாம் வகுப்புவரை மட்டுமே படித்திருக்கும் மலர்வதிக்கு இது எப்படி சாத்தியமானது? தூப்புத் தொழில் செய்துவந்த தனது தாயின் கடின வாழ்வு, குடும்பத்தின் வறுமை, முந்திரி தொழிற்சாலையில் முந்திரி உடைக்கும் வேலையில் கிடைத்த அனுபவம், அங்கு விளிம்புநிலை மக்களோடு ஏற்பட்ட நட்பு, வலிகளைச் சகிக்கும் வல்லமை போன்றவை உருவாக்கிய களம்தான் இவரை சாகித்ய அகாடமி விருது வாங்கும் நிலைக்கு உயர்த்தியுள்ளது. இவர் தனது வாழ்வு பற்றிப் பகிர்ந்து கொண்டதைக் கேட்போமா!.
நான் எனது அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே எனது அப்பா வேறு ஒரு திருமணம் செய்துகொண்டு வீட்டைவிட்டுப் போய்விட்டார். எனது அம்மா இரண்டு கைக்குழந்தைகளையும், வயிற்றில் என்னையும் சுமந்துகொண்டு நிர்க்கதியாக நின்றிருக்கிறார். பொருளாதாரச் சூழ்நிலையாலும், கொடுமையான வறுமையாலும்தான் எனது அம்மா, தூப்புக்காரி வேலைக்குப் போனார். அப்போது மாதம் 30 ரூபாய்தான் சம்பளம். பக்கத்திலுள்ள பள்ளிக்கூடத்தில்தான் வேலை. நான் பள்ளிக்கூடம் விட்டுவரும்போது, இடது கையில் துடைப்பத்தை வைத்துக் கொண்டு, வலது கையில் என்னை வாரி அணைப்பாங்க அம்மா. அன்றையக் காலங்களில் அவர்களிடம் வாங்கின ஒவ்வொரு முத்தத்திலும் கழிவறையின் கசப்பான துர்நாற்றத்தைத் தாண்டிய என் அம்மாவின் ஆளுமையை நுகர்ந்திருக்கிறேன். எங்கள் பகுதியில் இருக்கும் 'இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம், என்னுள் இருந்த இலக்கிய ஆர்வத்துக்குத் தீனி போட்டது. இயற்கை வாசிப்பும், மனித சுவாசிப்பும்தான் அப்போதிருந்தே என்னைப் பட்டை தீட்டின. ஏழ்மையைக் காரணம் காட்டி ஒதுக்கினவர்கள் ஒருபுறம், கல்வி நிலையை காரணம் காட்டி ஒதுக்கினவர்கள் மறுபுறம் என நிராகரிப்பின் நிழலிலேயே வாழ்ந்தேன். அதன்பின்தான் தன்னம்பிக்கை ஊட்டுகிற தலைவர்களுடைய வரலாறுகளை வாசிக்க ஆரம்பித்தேன். 2008ம் ஆண்டில், 'காத்திருந்த கருப்பாயி’ என்ற நாவலை எழுதினேன். கழுத்தில் இருந்த செயினை அடகு வைத்துத்தான் அதனை வெளியிட்டேன். ஏறக்குறைய 40 நாவல்களை எழுதி கசக்கி எறிந்திருப்பேன். பிறகுதான், அம்மாவுடைய வாழ்க்கையையே 'தூப்புக்காரி’ என்ற பெயரில் பதிவு செய்தேன். 'எதிர்த்து பேசி மல்லுக்கு நிற்பது பெண்மைக்கான வீரம் இல்லை. எதிர்நீச்சல் போட்டு ஜெயித்துக் காட்டுவதுதான் பெண்மைக்கான வீரம் என்று, என் அம்மா அடிக்கடி சொல்வார். அதைத் தன்னுடைய வாழ்க்கையிலயே நிரூபித்தவர்தான் என் அம்மா. ஒரு ரூபாய் சம்பளத்துக்காக வீடுகளில் தண்ணீர் எடுத்துக் கொடுப்பார். பக்கத்து வீடுகளுக்கு புளி குத்திக் கொடுப்பார். இரண்டு ரூபாய் கிடைக்குமென்று நியாயவிலைக் கடைகளுக்குப் பொருள்களைத் தலையில் சுமந்துவந்து கொடுப்பார். இத்தனை கஷ்டங்களையும் என் அம்மா சுமந்ததன் வெளிப்பாடுதான் இந்தத் தூப்புக்காரி.
அன்பர்களே, விளைவிப்பதும் அறுப்பதும் அவரவர் கையிலே, பயனாவதும் வீணாவதும் அவரவர் பார்வையிலே என்று அந்த புத்தமதச் சீடர் சொன்னதுதான் மலர்வதியின் வாழ்வுப் பயணத்தை வாசித்தபோது நினைவுக்கு வந்தது. தனது வாழ்வு இவ்வளவுதான் என்று வறிய நிலையிலே முடங்கிவிடாமல், தனக்குள் எரிந்து கொண்டிருந்த எழுத்து ஆர்வத்தைச் செயல்படுத்தியிருக்கிறார் இந்த எழுத்தழகி மலர்வதி. பெண்மைக்குள் சக்தி இருக்கிறது, சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ்கிற உத்வேகம் அதில் இருக்கிறது என்று நினைத்துச் செயல்பட்டதன் பயனே தூப்புக்காரியாக மலர்வதியை அவதாரம் எடுக்க வைத்துள்ளது; சாகித்ய அகாடமி விருதையும் வாங்கிக் கொடுத்துள்ளது; வறிய நிலையில் வாழ்ந்த அவரை நாடறியச் செய்துள்ளது.
அன்பர்களே, எத்தனையோ பேரின் அம்மாக்கள் தூப்புக்காரி போன்ற எத்தனையோ மனிதமற்ற வேலைகளைச் செய்கிறார்கள், குடிகாரக் கணவர்களின் கொடுமைகளால் கஷ்டமான வேலைகளைச் செய்து குடும்பப் பாரத்தைச் சுமக்கிறார்கள். ஆனால் எல்லாரும் மலர்வதியாகவில்லை. எனவே, அவரவர் வாழ்வின் முன்னேற்றம் அவரவர் கைகளிலே இருக்கின்றது என்ற உத்வேகத்தால் ஒவ்வொருவரும் உந்தித்தள்ளப்பட வேண்டும். மற்றவர்களெல்லாம் சாதிக்கிறார்களே, என்னால் முடியவில்லையே என்று வெட்டிப்பேச்சு பேசிக் கொண்டிருக்காமல், முன்னேறும் வழிகள் குறித்து ஆராய வேண்டும். வாழ்வில் சாதிப்பவர்களின் வாழ்வு குறித்து வாசித்து சிந்திக்க வேண்டும், பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும். சீராக் நூலில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.
“ஞானிகளுடைய அறிவுரைகளைப் புறக்கணியாதே. அவர்களுடைய பொன்மொழிகளைக் கற்றுணர். அவற்றால் நற்பயிற்சி பெறுவாய். பெரியவர்களுக்குப் பணிசெய்யக் கற்றுக்கொள்வாய். முதியோரின் உரைகளைப் புறக்கணியாதே. அவர்களும் தங்கள் முன்னோரிடமிருந்தே கற்றுக்கொண்டார்கள். அவர்களிடமிருந்து நீயும் அறிவுக் கூர்மை பெறுவாய். தகுந்த நேரத்தில் தக்க விடை கூற அறிந்துகொள்வாய்” (சீராக் 8,8-9)
என்று சீராக் நூலில் சொல்லப்பட்டுள்ளது. சிலரது சாதனைகளைப் பார்க்கும்போது, விளைவிப்பதும் அறுப்பதும் அவரவர் கையிலே, பயனாவதும் வீணாவதும் அவரவர் பார்வையிலே என்ற கூற்றுதான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது. கேரளப் பழங்குடிகளின் ஒப்பற்ற தலைவி என்று பெயர் பெற்றுள்ள ஜானு என்ற பெண், ஏறக்குறைய 25 ஆயிரம் பழங்குடியின மக்களுக்கு நிலம் பெற்றுத்தந்து அம்மக்களின் மண்ணுரிமையை உறுதி செய்துள்ளார். கேரளக் காட்டின் கடைசிக் குடிசையில் வாழும் ஜானு என்ற பழங்குடிப் பெண்ணுக்கும், அம்மாநில முதல்வருக்கும் இடையில் நில உரிமை குறித்து ஒப்பந்தம் ஒன்று உருவாகியுள்ளது. அண்மையில் சென்னை வந்த ஜானு நிருபர்களிடம் சொல்லியிருக்கிறார் : ''நான் படிக்கவில்லை. ஏழு வயதிலேயே விறகு பொறுக்கவும் கூலிவேலைக்கும் செல்லத் துவங்கினேன். பிறகு, தையல் வேலை பார்த்தேன். எந்த வேலையுமே மூன்றுவேளை கஞ்சிக்கு உத்தரவாதம் தரவில்லை. விவரம் தெரியத்தெரிய, அரசியல் கட்சிகள் எங்கள் ஆதிவாசி மக்களை ஏமாற்றிப் பிழைப்பது புரிந்தது. ஊர், ஊராக அலைந்துதிரிந்து போராடுவதற்காக எங்கள் மக்களை அணி திரட்டினேன். எத்தனையோ போராட்டங்கள், கைதுகளுக்குப் பிறகு 'கோத்ர மகா சபை’யைத் தொடங்கினோம். எங்கள் மக்கள் எல்லோரும் வந்துசேரத் துவங்கினார்கள். அந்தச் சபை நடத்திய போராட்டங்கள் மூலம் இதுவரை 25 ஆயிரம் பழங்குடி மக்களுக்கு நிலம் பெற்றுத்தந்துள்ளோம். போராட வேண்டும் என்ற உறுதியான எண்ணம் மனதில் இருக்க வேண்டும். அவ்வெண்ணம் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்று.
விளைவிப்பதும் அறுப்பதும் அவரவர் கையிலே, பயனாவதும் வீணாவதும் அவரவர் பார்வையிலே. இப்படிச் சிந்திக்காமல், எனது வாழ்வு, பயனாவதும் வீணாவதும் அடுத்தவர் கையிலே இருக்கின்றது என்று நினைத்து, தனது வாழ்வில் நடக்கும் நல்லதுக்கும் தீயதுக்கும் அடுத்தவரைக் கைகாட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அடுத்தவரை ஒரு விரல் நீட்டும்போது அடுத்த நான்கு விரல்களும் நம்பக்கமே திரும்பி இருக்கின்றன. எனவே ஒவ்வொருவரும் குறை வெளியில் இல்லை, தன்னிடமே இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
தன்னைச் சுற்றியிருக்கும் எல்லாமே ஒருவருக்கு வெறுப்பைத் தருவதாக ஒருவர் உணர்ந்தால், முதலில் அந்த நபரே வெறுப்புடன் இருக்கிறார் என்று அர்த்தம் என பெரியவர்கள் சொல்கிறார்கள். ஒருசமயம் ஒரு சுவாமிஜி ஒரு கிராமத்தில் ஓய்வு விடுதியில் தங்கியிருந்தார். அவ்விடுதியிலுள்ள மரத்தடியில் அக்கிராமத்தின் தெருநாய்கள் இரவில் வந்து கூடி வாள்வாள் என குரைக்கும். அன்று அந்த விடுதியில் தங்கியிருந்த அமைச்சர் ஒருவருக்குத் தூக்கமே வரவில்லை. எனவே பாதி இரவில் அந்தச் சுவாமிஜியிடம் வந்த அமைச்சர் அவரை எழுப்பி, உங்களால் எப்படி ஆழ்ந்து தூங்க முடிகின்றது என்று கேட்டார். அதற்கு அவர், இந்த நாய்களுக்குத் தினத்தாள் வாசிக்கத் தெரியாது. அதனால் நீர் இன்று இங்கே இருப்பதும் அவைகளுக்குத் தெரியாது. நாய்கள் அவற்றின் வேலையைச் செய்கின்றன. நீங்கள் ஏன் நாய்களால் கஷ்டப்படுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அமைச்சர், நாய்கள் இப்படிக் குலைத்தால் நான் எப்படிக் கஷ்டப்படாமல் இருக்க முடியும் என்று கேட்டார். அதற்கு அந்தச் சுவாமிஜி, அமைச்சரே, நீங்கள் நாய்கள் குலைப்பதை எதிர்த்துப் போராட வேண்டாம். உங்களுக்குப் பிரச்சனையை உருவாக்குவது நாய்களுடைய சப்தமில்லை. உங்களுடைய போராட்டம்தான். இந்த நாய்கள் குலைப்பதை நிறுத்தினால்தான் என்னால் தூங்க முடியும் என, உங்களுக்கு நீங்களாகவே ஏற்படுத்தியுள்ள நிபந்தனைதான் பிரச்சனையே. உங்கள் நிபந்தனையை நாய்கள் கவனிக்காது. ஆனால் உங்களது நிபந்தனை உங்களைத் தொந்தரவு செய்கிறது. அதை முதலில் நிறுத்துங்கள். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை நமக்குத் தகுந்த மாதிரி நிர்ப்பந்தப்படுத்த நினைக்கிறோம். அது முடியாத செயல். அதனால் உங்களை முதலில் புரிந்து கொள்ளுங்கள். விளைவிப்பதும் அறுப்பதும் அவரவர் கையிலே, பயனாவதும் வீணாவதும் அவரவர் பார்வையிலே என்று அந்தப் புத்தமதச் சீடர் போலச் சொன்னார் அந்தச் சுவாமிஜி. ஆம். விளைவிப்பதும் அறுப்பதும் அவரவர் கையிலே, பயனாவதும் வீணாவதும் அவரவர் பார்வையிலே.







All the contents on this site are copyrighted ©.