2013-04-01 15:04:50

சமுதாயத்தின் விளிம்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அரவணைத்தார் - அருள்தந்தை Lombardi


ஏப்ரல்,01,2013. சமுதாயத்தின் விளிம்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு சிறு குடும்பத்தின் உறுப்பினர்களை அரவணைக்கும் வகையில் திருத்தந்தை பிரான்சிஸ் புனித வியாழன் மாலை திருப்பலியில் இளம் கைதிகளின் பாதங்களைக் கழுவித் துடைத்தார் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
புனித வியாழன் மாலை 'இயேசுவின் இறுதி இரவுணவுத் திருப்பலி'யை உரோம் நகரில் உள்ள Casal del Marmo எனப்படும் வளர் இளம் கைதிகள் இல்லத்தில் கொண்டாடியத் திருத்தந்தை, அப்பலியின் ஒரு முக்கிய பகுதியான பாதம் கழுவும் சடங்கின்போது இரு இளம்பெண்களின் பாதங்களைக் கழுவினார் என்பதை ஒரு பிரச்சனையாக ஊடகங்கள் பேசி வந்ததற்குப் பதிலிறுக்கும் வகையில் அருள்தந்தை Lombardi விளக்கம் ஒன்றை வெளியிட்டார்.
அனைத்து மக்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் ஒரு பொதுவான திருவழிபாட்டில் பாதம் கழுவும் சடங்கிற்கு ஆண்களே தெரிவு செய்யப்பட்டிருப்பர் என்று விளக்கம் அளித்த அருள்தந்தை Lombardi, இளம் கைதிகள் இல்லமோ ஒரு தனிப்பட்ட குழுமம் என்றும், அங்கு பெண்களை ஒதுக்கிவைப்பது பொருள் தராத சடங்காக மாறும் என்றும் கூறினார்.
அடுத்தவருக்கு பணிவிடை செய்தல் என்ற உயர்ந்ததோர் பாடத்தை இயேசு பாதம் கழுவும் சடங்கில் நமக்குச் சொல்லித்தருகிறார் என்றும், அத்தகைய உன்னதமான ஒரு செயலில் ஆண் பெண் என்ற வேறுபாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவது அந்த எடுத்துக்காட்டின் மேன்மையைக் குறைக்கும் என்றும் அருள்தந்தை Lombardi விளக்கினார்.








All the contents on this site are copyrighted ©.