2013-03-29 13:07:24

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வளர் இளம் கைதிகள் இல்லத்தில் ஆற்றிய திருப்பலி


மார்ச்,29,2013. புனித வியாழனன்று மாலை 5.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரில் உள்ள வளர் இளம் கைதிகள் இல்லத்தில் ஆண்டவரின் இரவுணவுத் திருப்பலியை நிகழ்த்தினார்.
திருத்தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க, ஊடகத்தினரின் பங்கேற்பு ஏதுமில்லாமல் நிகழ்ந்த இத்திருப்பலியில், Casal del Marmo என்ற இவ்வில்லத்தில் வைக்கப்பட்டுள்ள 50 கைதிகளும், அவர்களைக் கண்காணிப்பவர்களும் கலந்துகொண்டனர்.
புனித வியாழன் திருப்பலியின் ஒரு முக்கிய நிகழ்வான பாதம் கழுவும் சடங்கிற்கு முன்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அச்சடங்கின் பொருளை அங்கு கூடியிருந்த இளையோருக்கு உணர்த்தும் வண்ணம் ஒரு சிறு மறையுரையை வழங்கினார்.
மறையுரைக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளம் கைதிகள் பன்னிருவரின் பாதங்களைக் கழுவி, துடைத்து, பாதங்களை முத்தமிட்டார். 76 வயதான திருத்தந்தை ஆறு முறை தரையில் முழுவதும் மண்டியிட்டு, ஒவ்வொரு முறையும் இருவரது பாதங்களைக் கழுவி முத்தமிட்டது மனதைத் தொடும் நிகழ்வாக அமைந்ததென்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
இந்தப் பன்னிருவரில் இரு இளம் பெண்களும், இஸ்லாமிய இளையோர் இருவரும் இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. அதேபோல், திருஅவை வரலாற்றில் இதுவரை வேறெந்தத் திருத்தந்தையும் பெண்களின் பாதங்களைக் கழுவியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் – வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.