2013-03-29 13:12:04

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெறும் சிலுவைப்பாதையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு


மார்ச்,29,2013. புனித வெள்ளியன்று இரவு 9.15 மணியளவில் உரோம் நகரின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமான Colosseum திடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் சிலுவைப்பாதை நடைபெறுகிறது.
இச்சிலுவைப்பாதையை அந்தியோக்கு மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தலைவர் கர்தினால் Bechara Boutros Raï அவர்கள், லெபனான் நாட்டு இளையோர் இருவருடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.
உலகில் நிலவும் பிரிவினைகள், அநீதிகள், போர்கள் ஆகிய அனைத்து தீமைகளாலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இளையோரை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இச்சிலுவைப்பாதையில், ஒவ்வொரு நிலையிலும் ஒரு சமுதாயப் பிரச்சனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இச்சிலுவைப் பாதையின் நான்கு மற்றும் ஐந்தாம் நிலைகளில் மாற்றுத் திறனாளிகள் சிலர் பங்கேற்க உள்ளனர் என்று UNITALSI என்ற பிறரன்பு அமைப்பு அறிவித்துள்ளது.
புனித பேதுரு பசிலிக்கா, மரியன்னையின் புனித லூர்து திருத்தலம், பாத்திமா திருத்தலம் போன்ற திருத்தலங்களுக்குச் செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் செய்யும் ஒரு பிறரன்பு அமைப்பு UNITALSI.
உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்த இறை இரக்க ஞாயிறன்று உரோம் ஆயராக புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பொறுப்பேற்கும் விழாவன்றும் அவரைச் சந்திக்க விழையும் மாற்றுத் திறனாளிகளுக்கு UNITALSI சிறப்பான அழைப்பை விடுத்துள்ளது.
மார்ச் 19ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பணியேற்றத் திருப்பலிக்கு முன்னர் அவர் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் மாற்றுத் திறனாளி ஒருவரை அரவணைத்தது, அவர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை எழுப்பியுள்ளது என்று UNITALSI அமைப்பின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் – வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.