2013-03-27 15:51:44

புதியத் திருத்தந்தைக்குச் செபிக்குமாறு, காத்மண்டு ஆயர் அந்தனி ஷர்மா வேண்டுகோள்


மார்ச்,27,2013. நேபாளத்தில் ஜூன் மாதம் நிகழவிருக்கும் தேர்தல்கள் மூலம் நாடு நலமிக்க பாதையில் செல்வதற்கும், அகில உலகக் கத்தோலிக்கர்களின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் புதியத் திருத்தந்தைக்கும் செபிக்குமாறு, காத்மண்டு ஆயர் அந்தனி ஷர்மா மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இவ்வாண்டு நிகழ்ந்த குருத்து ஞாயிறுத் திருப்பலியில் மறையுரையாற்றிய ஆயர் ஷர்மா, நேபாளத்தில் மத சார்பற்ற நல்லதொரு அரசு அமைய செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள எடுத்துக்காட்டான வாழ்வு, கிறிஸ்துவை எடுத்துரைக்கும் பணியில் தங்களை உற்சாகப்படுத்துவதாக இத்திருப்பலியில் கலந்துகொண்ட இளையோர் கூறினார்.
குருத்து ஞாயிறு திருப்பலியில் கிறிஸ்தவர் அல்லாத ஏனைய மத இளையோர் பலர் கலந்து கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
திருத்தந்தையின் சொற்களும் செயல்களும் தங்கள் உள்ளங்களை உயர்த்துகின்றன என்றும் அவர் விரைவில் பங்களாதேஷ் வருவதை எதிர்பார்த்திருப்பதாகவும் பங்களாதேஷ் தலைநகரான டாக்காவைச் சேர்ந்த இளையோர் கூறினர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் – AsiaNews








All the contents on this site are copyrighted ©.