2013-03-27 15:49:28

திருத்தந்தையர் தங்கிவந்த வத்திக்கான் மாளிகையில் திருத்தந்தை பிரான்சிஸ் தங்கமாட்டார்


மார்ச்,27,2013. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தந்தையர் தங்கிவந்த வத்திக்கான் மாளிகையில் தங்காமல், கான்கிளேவ் கர்தினால்கள் அவை நடைபெற்றபோது தான் தங்கியிருந்த புனித மார்த்தா இல்லத்திலேயே தொடர்ந்து தங்குவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முடிவு செய்துள்ளார்.
இம்முடிவை இச்செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு அறிவித்த திருப்பீடப் பேச்சாளர், இயேசுசபை அருள்தந்தை Federico Lombardi, திருத்தந்தையர் இல்லத்தில் உள்ள நூலகத்தையும், பார்வையாளர்கள் அரங்கத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் தேவைப்படும்போது பயன்படுத்துவார் என்றும் அறிவித்தார்.
அதேபோல், ஞாயிறு மூவேளை செபஉரை வழங்குவதற்கும், இதுவரை பயன்படுத்தப்பட்ட மேல்மாடி சன்னலையே திருத்தந்தை பிரான்சிஸ் பயன்படுத்துவார் என்றும் அருள்தந்தை Lombardi குறிப்பிட்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Buenos Aires பேராயராகப் பணியாற்றியபோதும், அவருக்குரிய பேராயர் இல்லத்தில் தங்காமல், ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் மக்களுடன் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ அடையாளத்தில், அன்னை மரியாவைக் குறிக்கும் அடையாளமான ஐந்து முனைகள் கொண்டிருந்த விண்மீன், எட்டு முனைகள் கொண்ட விண்மீனாக மாற்றப்பட்டுள்ளது என்றும், இயேசு வழங்கிய மலைப் பொழிவில் கூறப்பட்டுள்ள பேறுபெற்றோர் என்ற 8 வாக்கியங்களை நினைவுறுத்தும் வகையில் 8 முனைகள் கொண்ட விண்மீன் அமைக்கப்பட்டுள்ளதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் – வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.