2013-03-27 16:04:23

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் புதன் பொது மறைபோதகம்


மார்ச் 27, 2013. திருத்தந்தை பிரான்சிஸ் திருஅவையின் தலைமைப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் நிகழ்த்திய இந்த முதல் புதன் பொது மறைபோதகத்தில், திருஅவை இவ்வாரத்தில் கொண்டாடிவரும் புனித வாரத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மறைபோதகத்தின் துவக்கத்தில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு தன் நன்றியையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். விசுவாச ஆண்டு குறித்த மறைக்கல்விப் போதனைகளை இயேசு உயிர்ப்பு ஞாயிறுக்குப்பின் தொடர்வதாகவும் எடுத்துரைத்தார் பாப்பிறை. RealAudioMP3
புனித வாரம் குறித்து இந்நாளில் உங்களோடு பேச விழைகிறேன். குருத்து ஞாயிறோடு இப்புனித வாரத்தைத் துவக்கியுள்ளோம். இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்போடு நாம் அவரோடு இணைந்து செல்லும் இந்த வாரம், திருவழிபாட்டு ஆண்டின் மையமாக உள்ளது.
புனித வாரத்தில் வாழ்வது என்பது நமக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது? கல்வாரியின் சிலுவை மற்றும் உயிர்ப்பை நோக்கிய அவரின் பாதையில் பின்செல்வது என்பது எதைக் குறிக்கிறது? தன் இவ்வுலகப் பணிக்காலத்தின்போது இயேசு புனித பூமியின் தெருக்களில் நடந்தார், தன்னோடு இருக்கும்படி 12 சாதாரண மனிதர்களைத் தேர்ந்துகொண்டார். அனைவரிடமும் எவ்வித வேற்றுமையும் பாராட்டாமல் உரையாற்றினார். பெரியவர், சிறியவர், பணக்கார இளைஞன், ஏழை விதவை, பலம்பொருந்தியவர், பலவீனமானவர் என வேறுபாடின்றி இறைவனின் கருணையையும் மன்னிப்பையும் வழங்கினார். அவர்களைக் குணப்படுத்தினார், ஆறுதலளித்தார், அனைவருக்கும் நம்பிக்கையை ஊட்டினார். ஒரு நல்ல தந்தையாக, நல்ல தாயாக அனைத்து மனிதர்களிடமும் அக்கறையுடையவராக இருக்கும் இறைவனை நோக்கி மக்களை வழிநடத்திச் சென்றார் இயேசு. நாம் அவரை நோக்கிச் செல்லவேண்டும் என இறைவன் காத்திருக்கவில்லை, மாறாக, எவ்விதக் கணக்கும் பார்க்காமல் அவர் நம்மை நோக்கி வந்தார். ஆயனற்ற ஆடுகள் போல் வாழ்ந்த மக்களிடையே வந்த இயேசுகிறிஸ்து, தினசரி உண்மை நிலைகளின் முன்னால் ஒரு சாதாரண மனிதன் போலவே வாழ்ந்தார். தங்கள் சகோதரன் இலாசரின் மரணத்தினால் துயருற்ற மார்த்தா மற்றும் மரியாவின் முன்னால் இயேசு அழுதார், வரி வசூலிப்பவர் ஒருவரைத் தன் சீடராக ஏற்றுக்கொண்டார், மற்றும் தன் நண்பனின் நம்பிக்கைத் துரோகத்திற்கும் உள்ளானார். நம் நடுவே நம்மோடு இருக்கிறார் என்ற உறுதிப்பாட்டை கிறிஸ்துவில் நமக்கு வழங்கியுள்ளார் இறைவன். 'நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை' என்றார் இயேசு. இ RealAudioMP3 யேசுவுக்கு வீடு இல்லை, ஏனெனில் மக்களே அவர் வீடு. அந்த வீட்டின் பணி என்பது இறைவனின் அனைத்துக் கதவுகளையும் திறப்பது, மற்றும் இறைவனின் அன்புப் பிரசன்னமாக விளங்குவது. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவில் வரலாறு முழுவதும் தொடர்ந்து வரும் இந்த அன்பு திட்டத்தைத்தான் இப்புனிதவாரப் பயணத்தின் உச்சமாக நாம் கொண்டாடப்போகிறோம். தனக்கென எதுவும் எடுத்துக்கொள்ளாமல் தன்னை முழுமையாக கையளிக்கும் அந்த நிலை நோக்கி யெருசலேமிற்குள் நுழைகிறார் இயேசு. தன் நண்பர்களுடன் மேற்கொண்ட இறுதி இரவு உணவின்போது நமக்கென அப்பத்தைப் பகிர்ந்து கிண்ணத்தை வழங்கினார். நம்மோடு இருப்பதற்கென, நம்மோடு குடியிருப்பதற்கென நம் கைகளில் தன் உடலையும் இரத்தத்தையும் கையளித்தார் இறைமகன். பிலாத்தின் முன்னான விசாரணையின் போது நடந்தது போலவே ஒலிவ மலையிலும், இறைவாக்கினர் எசாயா உரைக்கும் துன்புறும் ஊழியன் போல், எவ்வித மறுப்பும் இன்றி தன்னையே கையளிக்கிறார் இயேசு. தியாகத்திற்கு இட்டுச்சென்ற இந்த அன்புத்திட்டத்தை, ஏதோ இதுதான் தலைவிதி என்பதாக இயேசு வாழவில்லை, வன்முறையான் இந்த மரணத்தின் முன்னால் ஆழமான துன்ப நிலைகளை அவர் மறைக்கவில்லை, மாறாக, இறைவனில் முழு நம்பிக்கை கொண்டு செயல்பட்டார். நம்மீது இறைவன் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்காக இறைவிருப்பத்திற்கு முற்றிலும் இணங்கியவராக, தந்தையாம் இறைவனின் அன்பிற்கான பதிலுரையாக தன்னையே சாவுக்குக் கையளித்தார். சிலுவையில் இயேசு என்னை அன்புகூர்ந்தார், எனக்காக தன்னை கையளித்தார், என்கிறார் தூய பவுல். இது நமக்குத் தரும் அர்த்தம் என்ன? இதுவே என்னுடைய, உங்களுடைய பாதை என்பதே இதன் அர்த்தம். இயேசுவைப் பொறுத்தவரையில், புனித வாரத்தை வாழ்வது என்பது இதயத்தின் உணர்வுகளால் மட்டும வாழ்வதல்ல. நாம் நம்மிலிருந்து வெளியே வந்து, தூரமாக இருக்கிற, அதேவேளை கைவிடப்பட்ட மற்றும் புரிந்துகொள்ளுதலுக்காகவும், ஆறுதலுக்காகவும், உதவிகளுக்காகவும் ஏங்கும் மக்களுக்கென நம்மைத் திறக்க வேண்டும். அன்பும் கருணையும் நிறைந்த இயேசுவின் வாழும் பிரசன்னத்தைக் கொணரவேண்டியது இன்றைய அத்தியாவசிய தேவையாக உள்ளது. புனித வாரத்தை வாழ்வது என்பது சிலுவையின் வாழ்வாக, அதாவது துயரும் மரணமும் கொண்டதாகத் தோன்றுகிறது, ஆனால் இது வாழ்வைக் கொணரும் அன்பையும், தன்னையே வழங்கலையும் உள்ளடக்கியது. கிறிஸ்துவோடு இணைந்து வாழ்வது என்பது முதலில் நம்மை விட்டு நாம் வெளிவருவதை எதிர்பார்க்கிறது. கடவுள் நம்மிடையே குடிகொள்ள வந்தார். நமக்கு நம்பிக்கையைத் தந்து நம்மை மீட்கும் இறைஇரக்கத்தை நமக்குக் கொணர்ந்தார். நாம் அவரோடு இணந்திருப்பது என்பது அந்த 99 ஆடுகளுள் ஒன்றாக இருப்பதில் மனநிறைவு கொள்வதில் இல்லை, மாறாக அந்தக் காணாமல் போன ஓர் ஆட்டைக் கண்டுபிடிப்பதில் அவரோடு இணைந்து தேடுவதில் இருக்கிறது.
RealAudioMP3 'எனக்கு நேரமில்லை', 'எனக்கு நிறைய வேலையிருக்கிறது', 'இது சிரமமானது', -'என்னிடமுள்ள சிறிய சக்தியை வைத்துக்கொண்டு நான் என்ன பெரிதாக சாதித்துவிடமுடியும்' என நம்மில் சிலர் கேட்கலாம். நாம் பலவேளைகளில் சிறு செபங்களிலும், ஞாயிறு திருப்பலிகளிலும், சின்ன பிறரன்புச் செயல்களிலும் நிம்மதியடைந்துவிடுகிறோம். கிறிஸ்துவை மற்றவர்களுக்குக் கொணர்வதற்கு நாம் நம்மையே திறக்க முன்வருவதில்லை. நாமும் கொஞ்சம் தூய பேதுருபோல் உள்ளோம். தன் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு, அதாவது தன்னையே முற்றிலுமாக அன்பில் பிறருக்கு வழங்குவது குறித்து இயேசு பேசியபோது தூய பேதுரு இயேசுவை தனியாக அழைத்துப்போய் கடிந்து கொள்கிறார். இயேசு எடுத்துரைத்தது அவரால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது, மெசியா குறித்த அவரின் எண்ணத்திற்கு முரணானதாக இருந்தது. இயேசுவோ துய பேதுருவை நோக்கி கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், ' என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்' என்று கடிந்துகொண்டார். கடவுள் கருணையுடன் எண்ணுகிறார். தன் மகன் திரும்பி வருவதற்காகக் காத்திருக்கும் அன்பு தந்தையாகச் செயல்படுகிறார். கள்வர்களால் தாக்கப்பட்டவனைக் கண்டு அவனுக்கு உதவும் நல்ல சமாரித்தனாக இறைவன் செயல்படுகிறார். தன் உயிரையேக் கொடுத்து மந்தையைக் காக்கும் நல்லாயனாக இறைவன் உள்ளார்.
நாம் நம் விசுவாசத்தின் ஒளியையும் மகிழ்வையும் நம் அயலார்க்குக் கொணரும் வண்ணம் நம்மையேவிட்டு வெளியே வந்து நம் இதயங்களின், வாழ்வின், பங்குதளங்களின், இயக்கங்களின் கதவுகளை மற்றவர்களுக்கு திறக்க உதவும் அருளை இறைவன் நமக்கு வழங்கும் காலமே இந்த புனித வாரம். இறைவனின் அன்புடன் நாம் செயல்படும்போது இறைவனே நம்மை வழிநடத்தி நம் செயல்பாடுகளைப் பலனுள்ளதாக மாற்றுகிறார். இறைவனின் அன்பை நாம் சந்திக்கும் மனிதர்களுக்கு கொணரும் வண்ணம் இந்நாட்களில் மன உறுதியுடன் வாழ உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, மத்திய ஆப்பிரிக்கவில் இடம்பெறும் மோதல்கள் நிறுத்தப்பட்டு அமைதி திரும்ப உழைக்க வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார். அந்நாட்டில் துன்புறும் மக்களுக்காக தான் செபித்து வருவதாகவும் உறுதி கூறினார் பாப்பிறை. பின்னர் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.