2013-03-25 15:58:09

வாரம் ஓர் அலசல் – தீமைக்கு ஒருபோதும் இடம் கொடுக்க வேண்டாமே


மார்ச்,25,2013 RealAudioMP3 . அன்பு நெஞ்சங்களே, UNHRC என்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அவை, சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் நடத்திய 22வது பேரவையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்க ஐக்கிய நாடு முன்வைத்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி கடந்த பல நாள்களாக தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி, சாலை மறியல், முற்றுகை போன்றவை இடம்பெற்றன. இலங்கையில் 2008-2009ம் ஆண்டில் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷேவின் அரசு நடத்திய படுகொலையில் 1,46,697 அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதுபோன்ற இன்னும் பல கொடிய மனித உரிமை மீறல்கள் அங்கு இடம்பெற்றன. கடந்த வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம், கானடாவின் சிறப்புப் பிரதிநிதி Hugh Segalடம் சொல்லியிருப்பதுபோல, போரின் இறுதிக்கட்டத்தில் பெருமளவான அப்பாவி குடிமக்கள் காணாமற்போயினர், நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விசாரணையின்றி சிறையில் உள்ளனர், வேலைவாய்ப்புகள் மற்றும் கல்விக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும்போது பாரபட்சம் காட்டப்படுகின்றது, யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் அதிகரித்து வருகின்றனர், வடபகுதியில் இராணுவம், மக்களின் நிலங்களை அபகரித்து வருகின்றது. இவை போன்ற தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இன்றும் தொடருவதால், தமிழகக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் இணைந்து ஒற்றைக் குரலில், இனப்படுகொலை செய்த ராஜபக்ஷேவைத் தண்டிக்க வேண்டும்!’ எனக் கிளர்ந்தெழுந்தார்கள். மாணவர்கள் பெரும் சக்தியாகத் திரண்டு நின்று போராடியது தமிழகத்தையே கிடுகிடுக்க வைத்தது. இம்மாதம் 15ம் தேதியிலிருந்து கல்லூரிகள் காலவரையறையின்றி மூடப்பட்டன. UNHRCன் பேரவையில் இம்மாதம் 21ம் தேதி இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உட்பட 25 நாடுகள் கையெழுத்திட்டன. தமிழகத்திலும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படவிருக்கின்றன.
கேரளாவின் வல்லகடவு பொன்நகர் காலனியைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவரது இரு மகன்களாகிய, 17 வயது பகவதியும், 11 வயது சிவாவும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தபோது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர் என இஞ்ஞாயிறு தினத்தாளில் செய்தி வெளியாகியிருந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூயார்க் நகரைச் சேர்ந்த டேவிட் ரான்டா என்பவர், 23 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார் என, கடந்த சனிக்கிழமை தினத்தாளில் செய்தி பிரசுரமாகியிருந்தது. 1991ம் ஆண்டில் நடந்த வழிப்பறியின்போது யூத மத குரு ஒருவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார் டேவிட். கடந்த 23 ஆண்டுகளாக, சிறையில் இருந்த இவரை நிரபராதி எனக் கூறி, புரூக்ளின் மாவட்ட நீதிமன்றம் தற்போது விடுதலை செய்துள்ளது.
அன்பு நேயர்களே, இன்று நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று ஒருமுறை உற்று நோக்கினால், தீமை, இந்த மனித சமுதாயத்தின்மீது எத்தனை காயங்களைச் சுமத்தியுள்ளது என அறிவோம். இஞ்ஞாயிறு காலை வத்திக்கான் பேதுரு வளாகத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலியில் கலந்து கொண்ட 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்கு மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இன்றைய உலகின் நிலைமையை விளக்கினார். போர்கள், வன்முறை, நலிந்தவர்களைத் தாக்கும் பொருளாதார மோதல்கள், பணப்பேராசை, அதிகாரவெறி, ஊழல், பிரிவினைகள், மனித வாழ்வுக்கும், படைப்புக்கும் எதிரானக் குற்றங்கள் எனத் தீமையினால் மனித சமுதாயத்தின்மீது எவ்வளோ காயங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இன்னும், நமது சொந்தப் பாவங்கள், நாம் அன்புகூரத் தவறியது, கடவுளையும், நமக்கு அடுத்திருப்பவரையும், கடவுளின் படைப்பு அனைத்தையும் நாம் மதிக்கத் தவறியது ஆகிய தீமைகளும் மனித சமுதாயத்தின்மீது காயங்களைச் சுமத்தியுள்ளன என்று கூறினார் திருத்தந்தை. பணத்தின்மீது மக்கள் கொண்டிருக்கும் தணியாத்தாகம் பற்றிக் குறிப்பிட்டபோது, நாம் இறந்தபின் நம்மோடு எதையும் எடுத்துச் செல்வதில்லை என்றார். இறந்த உடலைப் போர்த்தியிருக்கும் துணியில் பணம்போடும் பை இருக்காது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாட்டி கூறுவார்களாம். அதையும் தனது மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.
அன்பு வானொலி நேயர்களே, இவ்வுலகில் காணப்படும் ஊழல், அநீதி, நமது சொந்தப் பாவங்கள் போன்ற தீமைகளை நம்மால் வெல்ல இயலும். ஏனெனில் நம்முடன் மரணத்தை வெற்றி கண்ட கிறிஸ்து இருக்கிறார். நம்முடன் நாம் நம்புகின்ற இறைவன் இருக்கிறார். ஆயினும், இவற்றை வெல்ல முடியாது என்று நமது பகைவனாகிய சாத்தான், நல்லவர் போன்று ஒரு முகமூடியைப் போட்டுக்கொண்டு நம்மைச் சோதிக்கும். அந்தத் தீயவனை நாம் நம்பத் தேவையே இல்லை. நாம் ஒருபொழுதும் தீமைக்குப் பழக்கப்பட்டவர்களாய் வளரக்கூடாது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று அனுப்பிய டுவிட்டர் செய்தியில் இதைத்தான் கூறியிருக்கிறார். வன்முறை, அநீதி, பாவம் ஆகிவற்றுக்கு முன்பாக உன்னால் எதுவும் செய்ய இயலாது என்று தீயவன் சொல்லும்போது நாம் அந்தத் தீயவனை நம்பக் கூடாது என்று திருத்தந்தை சொல்லியுள்ளார். அன்பர்களே, சாத்தானின் தூண்டுதலுக்கு உட்படாமல் பாவத்தையும் அநீதியையும் வன்செயலையும் எதிர்த்துச் செயல்படுகிறவர்கள் நம் மத்தியில் பலர் இருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த வாரத்தில் வெளியான நிகழ்வுகளில் மூன்றை மட்டும் இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் Michigan மாநிலத்தின் Hastings என்ற நகரத்தில், ஒருவர், 30 ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருடிய பணத்தை வட்டியோடு சேர்த்து திருப்பி அனுப்பியுள்ளார். அந்த ஆள் 1980களில் ஒரு கடையிலிருந்து 800 டாலரைத் திருடியிருக்கிறார். அன்றிலிருந்து உறுத்தல் மனதுடன் வாழ்ந்து வந்த அவர், 24 மணிநேரமும் செய்தியை ஒளிபரப்பும் News8 என்ற உள்ளூர் தொலைக்காட்சிக்கும், அவ்வூர் நகராட்சிக்கும் இத்திருட்டுக் குறித்து கடிதம் அனுப்பியிருக்கிறார். நகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தில் 1,200 டாலரையும் வைத்து அனுப்பியிருக்கிறார். தான் திருடிய கடையின் பெயரையும் குறிப்பிட்டு, தனது முட்டாள்தனமானத் திருட்டுச் செயலுக்கு மன்னிப்பையும் அவர் கேட்டுள்ளார். அதேபோல், Portlandல் வாழும் 31 வயதாகும் Margot Riphagen என்பவர், 15 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னிடமிருந்து களவுபோன 4 தங்க வளையல்களையும், திருடியவரின் மன்னிப்புக் கடிதத்தையும், அத்துடன் வீட்டுக்குப் புதிய பூட்டு வாங்குவதற்கு பத்து டாலரையும் கடந்த வாரத்தில் பெற்றுள்ளார். களவுபோன அனைத்து வளையல்களுமே பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவையாம்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற ஒரு நற்செயல், Facebook என்ற முகநூல் வலைத்தளத்தில் காட்டுத்தீ போல் பரவியுள்ளது. நன்மனம் கொண்ட ஓய்வுபெற்ற படைவீரர் ஒருவர், ஒரு பெண்ணின் காரின் முன்புறக் கண்ணாடியிலுள்ள துடைப்பானில், ஒரு சிறிய குறிப்புடன் 40 டாலரையும் வைத்துச் சென்றுள்ளார். பாஸ்டன் நகரின் புறநகர்ப் பகுதியில் வாழும் Samantha Ford என்பவர், இரண்டு குழந்தைகளுக்குத் தாய். இவர் அன்று Dunkin Donut உணவகத்திலிருந்து வந்தபோது தனது காரின் முகப்பில் இந்தச் சிறிய குறிப்பையும், இச்சிறிய தொகையையும் பார்த்திருக்கிறார். உடனே அதைப் புகைப்படம் எடுத்து முகநூலில் பிரசுரித்திருக்கிறார். அந்தச் சிறிய குறிப்பில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
எனது இதயத்தில் பாதி ஆப்கானிஸ்தானில் இருக்கின்றது என்று, உங்களது காரின் பின்பக்கத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒட்டுதாளில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். உங்களது அந்தப் பாதி திரும்பி வீட்டுக்கு வரும்போது அவரை வெளியே உணவகத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். உங்கள் இருவரது பணிக்கு நன்றி. அவர் ஆப்கானிஸ்தானில் படையில் பணி செய்கிறார். நீங்கள் இங்கு அவருக்காகக் காத்திருக்கிறீர்கள். இப்படிக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஓய்வுபெற்ற படைவீரர்.
இந்தக் குறிப்பை வாசித்ததும் என் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. இதைச் செய்த அந்த நபருக்கு நெஞ்சம் நிறை நன்றி சொல்ல விரும்புகிறேன். கடவுள் நம் நாட்டுப் படைவீரர்களையும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களையும் ஆசீர்வதிப்பாராக என்று Samantha Ford தனது முகநூலில் எழுதியிருக்கிறார். அன்பு நேயர்களே, தீமையும், தீய சக்தியும், தீயவனும் நம்மை ஒருபோதும் ஆக்ரமிக்க விடக்கூடாது. நாம் இப்போது கேட்ட இந்த மூன்று நிகழ்வுகளில், இந்த மூன்று பேரும் தீயவனுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார்கள். அதோடு, தங்களில் நன்மைத்தனத்தையும் வளர்த்துள்ளனர். திருடிய இருவரும், தங்களது செயல்களுக்காக வருந்தியிருக்கிறார்கள். இவர்கள் தங்களது வாழ்வில் மட்டுமல்லாமல், மற்றவர் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளனர். இப்போது அவர்களது வாழ்வில் கருணையும் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்திருக்கின்றன என நாம் சொல்லலாம்.
அன்பு நெஞ்சங்களே, நாம் சோகமான, மகிழ்ச்சியில்லாத மனிதர்களாக வாழக் கூடாது. மனத்தளர்ச்சிக்கு ஒருபோதும் இடம்கொடுக்கக் கூடாது. ஏனெனில் இறைவன் நம்மோடு எப்போதும் இருக்கிறார். அவர் நம்மைத் தனியே விடுவதில்லை. நமது துன்பம் நிறைந்த நேரங்களிலும், நமது வாழ்க்கை, பிரச்சனைகளாலும் தடைகளாலும் நிறைந்திருக்கும்போதும் அவர் நம்மோடு இருக்கிறார். அவர் நம்மோடு நடந்து நம்மைத் தம் தோள்களில் தூக்கிச் சுமக்கிறார். இதுதான் நம்மை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். இதுதான் நமது நம்பிக்கையாக இருக்க வேண்டும். இந்த மகிழ்ச்சியை நாம் உலகுக்கு அறிவிக்க வேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மறையுரையில் இதனையும் வலியுறுத்திச் சொன்னார். இறைவன்மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை எந்தச் சக்தியினாலும் திருடப்பட்டுவிட நாம் அனுமதிக்கக்கூடாது என்றும் திருத்தந்தை சொன்னார். எனவே, அன்பர்களே, திருத்தந்தை கூறியுள்ளது போல, இறைவன் நம்மோடு இருக்கும்போது நமது இதயம் ஒருபோதும் முதுமையடைவதில்லை. இறைவன் நம்மோடு என்றும் இருப்பதால், எழுபதோ, எண்பதோ எவ்வளவு வயதானாலும் நமது மனது எப்பொழுதும் இளமையாகவே இருக்கும். இளமையான மனதால், தீயவனுக்கு எதிராய்த் துணிச்சலுடன் போராட முடியும்.







All the contents on this site are copyrighted ©.