2013-03-25 16:18:30

திருத்தந்தை வழங்கிய குருத்து ஞாயிறு மறையுரை - மகிழ்வு, சிலுவை, இளமை


மார்ச்,25,2013. கிறிஸ்தவர்களாகிய நமது மகிழ்வு அதிகமான பொருட்களைப் பெற்றிருப்பதால் வரும் மகிழ்வு அல்ல, மாறாக, தலைசிறந்த ஒருவரைச் சந்திப்பதால் வரும் மகிழ்வு என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இஞ்ஞாயிறன்று குருத்து ஞாயிறு திருப்பலியை புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்களோடு கொண்டாடியத் திருத்தந்தை பிரான்சிஸ், மகிழ்வு, சிலுவை, இளமை ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார்.
கிறிஸ்துவைச் சந்திப்பதால் பெற்றுள்ள மகிழ்வை வேறு எவ்வித பிரச்சனையோ தடையோ பறித்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எருசலேம் நகருக்கு வந்த இயேசு, ஆரவாரங்களையும், புகழையும் பெறுவதற்காக அந்நகரில் நுழையவில்லை, மாறாக, பாடுகளையும் அவமானங்களையும் பெறுவதற்காக அங்கு நுழைந்தார் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இத்துன்பங்களைத் தாங்கியதாலேயே அவர் அரசராக நம் மனங்களில் வாழ்கிறார் என்றும் எடுத்துரைத்தார்.
தன் மறையுரையின் இறுதியில் அங்கு கூடியிருந்த இளையோரைச் சிறப்பான முறையில் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, ஜூலை மாதம் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறும் அகில உலக இளையோர் நாளில் அனைத்து இளையோரையும் சந்திக்க விழையும் தன் ஆவலை வெளிப்படுத்தினார்.ஆதாரம்- வத்திக்கான வானொலி







All the contents on this site are copyrighted ©.