2013-03-23 15:47:42

குருத்தோலை ஞாயிறு திருவழிபாடு


மார்ச்,23,2013. குருத்தோலை ஞாயிறு திருவழிபாட்டை இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குருத்தோலை ஞாயிறு, மறைமாவட்ட அளவில் கத்தோலிக்க இளையோர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், தென் இத்தாலியின் Puglia பகுதியின் ஒலிவ மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வட இத்தாலியின் Savona மாநிலம் குருத்தோலைகளை வழங்கியுள்ளது.
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால், 1984ம் ஆண்டில், மீட்பின் புனித ஆண்டை நிறைவு செய்தபோது, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு திருவழிபாட்டில் ஏறத்தாழ 3 இலட்சம் இளையோர் கலந்து கொண்டனர். இளையோரின் இந்தப் பங்கேற்பைப் பார்த்த திருத்தந்தை 2ம் ஜான் பால், அனைத்துலக கத்தோலிக்க இளையோர் தினத்தை 1985ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதியன்று அறிவித்தார். அவ்வறிவிப்பின்படி, 1986ம் ஆண்டு, முதல் அனைத்துலக கத்தோலிக்க இளையோர் தினம் சிறப்பிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகின் ஏதாவது ஒரு நாட்டில் அனைத்துலக கத்தோலிக்க இளையோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த 2013ம் ஆண்டு ஜீலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இத்தினம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
ஆண்டுதோறும் மறைமாவட்ட அளவில் குருத்தோலை ஞாயிறன்று, இளையோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.