2013-03-23 14:53:37

குருத்தோலை ஞாயிறு: ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 இன்று நாம் கொண்டாடும் குருத்து ஞாயிறு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வரலாற்றுப் பதிவைப் பார்த்தேன். அப்பதிவின் தலைப்பு என் எண்ணங்களை ஆரம்பிப்பதற்கு உதவியது. நான் பார்த்த அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: The Palm Sunday Tornado 1920, அதாவது, குருத்து ஞாயிறு சூறாவளி 1920. அமெரிக்காவின் Georgia, Indiana, Ohio பகுதிகளில் 1920ம் ஆண்டு, மார்ச் 28ம் தேதி, குருத்து ஞாயிறன்று உருவான சூறாவளிக் காற்று, மழை, புயல் இவைகளால் பல கட்டிடங்களும், மரங்களும் தரைமட்டமாயின. ஏறக்குறைய 400 பேர் இறந்தனர். 1200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மார்ச் மாதம் முதல், ஜூன் மாதம் முடிய உள்ள நான்கு மாதங்களில் அமெரிக்காவின் வானிலை அறிக்கைகளில் அடிக்கடி வரும் ஒரு செய்தி சூறாவளிகள். சூறாவளி தாக்கும் மாதங்களில் தான் குருத்து ஞாயிறும் கொண்டாடப்படுகிறது. குருத்து ஞாயிறு... சூறாவளி... இவை இரண்டையும் இணைத்துச் சிந்திப்பது பயனளிக்கும்.

முதல் குருத்து ஞாயிறு நடந்தபோதும் சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. இயற்கை உருவாக்கிய சூறாவளி அல்ல, இயேசுவின் உருவில் வந்த சூறாவளி. சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும், மரங்களை, வீடுகளை அடியோடு பெயர்த்து, வேறு இடங்களில் சேர்க்கும், அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடும்.
முதல் குருத்து ஞாயிறு நிகழ்வுகள் அனைத்தையும் தலைகீழாக மாற்றின. வழக்கமாய், எருசலேமில் நடத்தப்படும் வெற்றி ஊர்வலங்கள் அரசு அதிகாரிகளால், அல்லது மதத் தலைவர்களால் ஏற்பாடு செய்யப்படும். முதல் குருத்து ஞாயிறன்று நடந்த இந்த ஊர்வலமோ மக்களால் எதேச்சையாக, மானசீகமாக ஏற்பாடு செய்யப்பட்டது. “ஏற்பாடு செய்யப்பட்டது” என்பதை விட “தானாகவே ஏற்பட்டது” என்று சொல்வதே மிகவும் பொருந்தும். இயேசுவைச் சுற்றி எழுந்த இந்த கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம் ஆட்டம் கண்டிருக்கவேண்டும். அவர்கள் உருவாக்கியிருந்த அதிகார உலகம் தடம் புரண்டதைப் போல் உணர்ந்திருக்கவேண்டும்.
இயேசு தன் பணி வாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களுக்கு எல்லாமே தலைகீழாக மாறியதுபோல் இருந்தது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரம் இந்த குருத்து ஞாயிறு. இதைத் தொடர்ந்து, இயேசு அந்த மதத் தலைவர்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அமைப்பையும் தலைகீழாக்கினார். எனவே, இந்த குருத்து ஞாயிறு, அதிகார அமைப்புகளைப் பல வழிகளிலும் புரட்டிப்போட்ட ஒரு சூறாவளிதானே!

இத்தருணத்தில், கடந்த பத்து நாட்களாக, வத்திக்கானில் வீசிவரும் சூறாவளியையும் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. மார்ச் மாதம் 13ம் தேதி இரவு புனித பேதுரு பசிலிக்காவின் மேல்மாடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வடிவில் ஆரம்பமான தலைமைப் பணியை, சூறாவளி என்ற கோணத்தில் சிந்தித்துப் பார்க்கலாம். திருத்தந்தையின் செயல்கள், இதுவரை வத்திக்கானில் நடைபெற்று வந்த பல பாரம்பரியங்களை ஓரளவு புரட்டிப் போட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல. புரட்சி செய்யவேண்டும் என்ற எண்ணத்துடனோ, அனைத்தையும் தலைகீழாக மாற்றவேண்டும் என்ற கருத்துடனோ திருத்தந்தை பிரான்சிஸ் இந்த முயற்சிகளை மேற்கொள்வதுபோல் தோன்றவில்லை. அவர் தனக்குள் வளர்த்து வந்துள்ள எளிமையும், பணிவும் இந்த முயற்சிகளில் அவரை ஈடுபடுத்துகின்றன என்று சொல்வதே பொருந்தும்.
50 ஆண்டுகளுக்கு முன் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை துவக்கியபோது, “திருஅவையின் சன்னல்களைத் திறப்போம், ஆவியாரின் புதியத் தென்றல் திருஅவைக்குள் வீசட்டும்” என்று சொன்னார். 50 ஆண்டுகளுக்குப் பின், நாம் நம்பிக்கை ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வடிவத்தில் மீண்டும் புதிய காற்று, ஒரு சூறாவளியைப் போல திருஅவைக்குள் வீச ஆரம்பித்துள்ளதற்காக நாம் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

குருத்து ஞாயிறு துவங்கி, உயிர்ப்பு ஞாயிறு வரை உள்ள இந்த எழுநாட்களையும் தாய் திருஅவை புனித வாரம் என்று அழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில் இந்த வாரத்தை மட்டும் ஏன் புனித வாரம் என்று அழைக்க வேண்டும்? இயேசுவின் இவ்வுலக வாழ்வின் இறுதி நாட்களை நாம் நினைவு கூறுகிறோமே, அதனால்... அந்த இறுதி நாட்களில் நடந்தவைகள் பலவற்றில் புனிதம் எதுவும் காணப்படவில்லையே! நம்பிக்கைக்குரிய நண்பர் காட்டிக்கொடுத்தார். மற்றொரு நண்பர் மறுதலித்தார். மற்ற நண்பர்கள் ஓடி ஒளிந்துகொண்டனர். மனசாட்சி விலைபோனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில் அரசியல் சதுரங்கம் விளையாடப்பட்டது. இயேசு என்ற இளைஞர், நல்லவர், குற்றமற்றவர் என்று தெளிவாகத் தெரிந்தும், அவருக்குத் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில் அந்த இளைஞரை அடித்து, நொறுக்கி, ஒரு கந்தல் துணிபோல் சிலுவையில் தொங்கவிட்டு கொன்றனர்.
இப்போது பட்டியலிடப்பட்ட பாதகங்களில் புனிதம் எங்காவது தெரிந்ததா? இல்லையே! புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே! ஆம், வேறொரு இலக்கணம்தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற உண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர்தானே இயேசு. கடவுள் துன்பப்படக் கூடியவர்தான். அதுவும் அன்புக்காக எவ்வகை துன்பத்தையும் எவ்வளவு துன்பத்தையும் ஏற்பவரே நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை இயேசு அன்று சிலுவையில் சொல்லித்தந்தார். அதேபோல், அவரது இவ்வுலக வாழ்வின் இறுதி வார நிகழ்வுகள் அனைத்தும் புனிதத்தைப் பூமிக்குக் கொண்டுவந்த கால்வாய்கள் என்று நம்மை உணரவைத்தார் இயேசு.
இயேசு என்ற சூறாவளி எப்படி அதிகார வர்க்கத்தைப் புரட்டிப்போட்டதோ, அதேபோல் புனிதம், கடவுள் என்ற இலக்கணங்களையும் புரட்டிப்போட்டது. வேறு பல தலைகீழ் மாற்றங்களையும் இந்நாளில், இந்த வாரத்தில் நாம் கற்றுக்கொள்ள முடியும். கற்றுக்கொள்ள முயல்வோம்.

போட்டிகளில், போரில் வெற்றி பெற்று வரும் வீரர்களுக்கு ஒலிவ இலைகளால் ஆன மகுடத்தை உரோமைய மன்னர்கள் அணிவிப்பது வழக்கம். யூதர்கள் மத்தியிலோ ஒலிவ இலைகள் சமாதானத்தை, நிறைவான வளத்தைக் குறிக்கும் ஓர் அடையாளம். வெற்றி, அமைதி, நிறைவு எல்லாவற்றையும் குறிக்கும் ஓர் உருவமாக இயேசு, ஒலிவக் கிளைகளைத் தாங்கிய மக்கள் கூட்டத்தோடு எருசலேமில் நுழைந்தார்.
வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள், வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் வெற்றி பெற்றது ஒரு போட்டியின் வழியாக, போரின் வழியாக. போட்டியில் ஒருவர் வெற்றி பெற்றால், மற்றவர்கள் தோற்கவேண்டும். பிறரது தோல்வியில்தான் இந்த வெற்றிக்கு அர்த்தமே இருக்கும். போரில் பெறும் வெற்றிக்குப் பின்னே பல்லாயிரம் உயிர்களின் பலி என்ற கொடுமையும் புதைந்திருக்கும். போட்டியின்றி, போரின்றி அனைவருக்கும் வெற்றியைப் பெற்றுத்தரும் மன்னன், வீரன் இயேசு.
போரில் வெற்றிபெற்ற மன்னர்கள் வரலாற்றில் புகழோடு வாழ்ந்து மறைந்துவிட்டனர். ஆனால் இயேசு என்ற இந்த இளைஞனோ வாழ்ந்தார். மறையவில்லை. இன்னும் வாழ்கிறார். இக்கருத்துக்களை நான் சொல்லவில்லை, ஒரு பேரரசர் சொல்லிச் சென்றார். ஆம் அன்பர்களே, வரலாற்றில் புகழுடன் வாழ்ந்து மறைந்த பேரரசன் நெப்போலியன் போனபார்ட் இயேசுவைப்பற்றி சொன்ன கூற்று சிந்திக்க வேண்டியதொன்று:
"மனிதர்களை எனக்குத் தெரியும். இயேசு சாதாரண மனிதர் அல்ல. அலெக்சாண்டர், சீசர், ஷார்ல்மேய்ன் (Charlesmagne), நான்... இப்படி பலரும் பேரரசுகளை உருவாக்கியிருக்கிறோம். இவைகளை உருவாக்க நாங்கள் படைபலத்தை நம்பினோம். ஆனால், இயேசு அன்பின் பலத்தை நம்பி தன் அரசை உருவாக்கினார். இத்தனை நூற்றாண்டுகள் ஆன பிறகும், அவருக்காக உயிர் துறக்க கோடிக்கணக்கானோர் இன்னும் இருக்கின்றனர்."
ஒரு பேரரசர் மற்றொரு பேரரசரைப்பற்றி இவ்வளவு உயர்வாகப் பேசியுள்ளது வியப்புக்குரியதுதான்.

இதயங்களை அரசாளும் இயேசுவைப்பற்றி பேரரசன் நெப்போலியன் போனபார்ட் வெளிப்படுத்திய உண்மையை, மார்ச் 19ம் தேதி பல உலகத் தலைவர்கள் உணர்ந்திருப்பர் என்று ஊகிக்கலாம். மார்ச் 19ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்புப் பணியை ஏற்ற அந்தத் திருப்பலியில் கலந்துகொள்ள உலகத் தலைவர்கள் பலர் வந்திருந்தனர். அவர்கள் யாருக்கும் கிடைக்காத வரவேற்பும், மக்களின் ஈடுபாடும் திருத்தந்தைக்குக் கிடைத்தது. பல கோடி உலக மக்களின் கவனம் தன் மீது திரும்பியுள்ளது என்ற எண்ணம் துளியும் இல்லாமல், மிக எளிமையான திருப்பலி உடையை அணிந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்த விழாவில் தலைமையேற்று நடத்தியது ஓர் ஆழமான உண்மையை தெளிவாக்கியது. இவ்வுலக அதிகாரங்கள் உருவாக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு முன், இறைவனிடமிருந்து வரும் அதிகாரம் எப்போதும் அமைதியாக உயர்ந்து நிற்கும் என்ற உண்மை அது.

மார்ச் 19ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையின்போது, அதிகாரம் என்பதன் உண்மைப் பொருளை இவ்விதம் விளக்கினார்: பேதுருவின் வழித்தோன்றல் என்ற நிலை அதிகாரமுள்ள ஒரு நிலை. இயேசு பேதுருவுக்கு அதிகாரம் அளித்தார். ஆனால், அது, எவ்வகை அதிகாரம்? தன் உயிர்ப்புக்குப் பின்னர் பேதுருவைச் சந்தித்த இயேசு, அவரிடமிருந்து மும்முறை அன்பின் வாக்குறுதியைப் பெறுவதிலிருந்தும், என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்; என் ஆடுகளை மேய் என்று சொன்னதிலிருந்தும் இது எவ்வகை அதிகாரம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். பணி புரிவதே உண்மையான அதிகாரம். இந்தப் பணியில் தன்னை முழுவதும் இணைத்து, சிலுவையில் இறுதியில் இணைவதே திருத்தந்தையின் அதிகாரம். சிறப்பாக, மனுக்குலத்தில் வறியோர், வலுவிழந்தோர், எவ்வகையிலும் முக்கியத்துவம் பெறாதோர் திருத்தந்தையின் பணியில் முதலிடம் பெறவேண்டும். மத்தேயு நற்செய்தியில், இறுதித் தீர்வையின்போது சொல்லப்பட்டுள்ள பசியுற்றோர், தாகமுற்றோர், அன்னியர், ஆடையற்றோர், நோயுற்றோர், சிறையில் இருப்போர் (மத். 25: 31-46) ஆகியோரே இப்பணியின் முக்கிய மனிதர்கள். புனித யோசேப்பின் பணிவாழ்வில் விளங்கிய தாழ்ச்சியும், நம்பிக்கையும் திருத்தந்தையின் பணிவாழ்விலும் விளங்கவேண்டும். அன்புடன் பணிபுரிபவர்களால் மட்டுமே அகிலத்தைப் பாதுகாக்க முடியும்.

பணிவாழ்வு என்ற அதிகாரத்தின் வழியாக, மன்னர் இயேசு உருவாக்கிய, திருத்தந்தை பிரான்சிஸ் உருவாக்கிவரும் இறையரசு மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறது. அந்த அரசைப் பறைசாற்ற திருஅவை நமக்கு அளித்துள்ள ஒரு வாய்ப்பு இந்தக் குருத்து ஞாயிறு. புனிதம், வெற்றி, அரசு என்பனவற்றிற்கு புது இலக்கணம் வகுத்து, இறுதியில் கடவுளுக்கும் புது இலக்கணம் சொன்ன இயேசு, இப்புனித வாரத்தில் இன்னும் பல புதுப் பாடங்களை நமக்குச் சொல்லித்தர வேண்டுமென மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.